சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்து கவனிக்கப்பட்ட நடிகர்களில் மிக மிக முக்கியமானவர் சிவகார்த்திகேயன். இந்த பட்டியலை எடுக்கும் பொழுது நிச்சயம் கவினும், ஒரு முக்கியமான இடத்தை பிடித்திருக்கிறார். சரவணன் மீனாட்சி என்னும் சீரியல் மூலம் இவர் ரசிகர்களுக்கு பரிச்சயமானார். அதில் வேட்டையன் என்னும் கதாபாத்திரத்தில் அவர் வந்தார்.
பிறகு, கவினுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது பிக் பாஸ் நிகழ்ச்சி. அங்கிருந்து, வெள்ளி திரைக்கு வந்த அவர் உதவி இயக்குனராகவும் பணியாற்றினார். இப்படியான சூழலில்தான் லிப்ட் திரைப்படம் அவரை கதாநாயகனாக உயர்த்தியது. வசூல் ரீதியாக இந்த திரைப்படம் பெரிய வரவேற்பு பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக பாராட்டை பெற்றது.
குறிப்பாக அந்த திரைப்படத்தில் இடம்பெற்ற என்னா மயிலு சிரிச்சுகிட்டு பாடல் பட்டித் தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. இதன் பிறகுதான் கவினுக்கு டாடா திரைப்படம் வெளியானது. ஒரு கதாநாயகனாக அவருக்கு அங்கீகாரத்தை கொடுத்த திரைப்படம் அதுதான் என்று அடித்துக் கூறலாம். 2023 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம், மிகப்பெரிய வெற்றியை பெற்றது
முதிர்ச்சியான இளைஞர் கதாபாத்திரத்தில் கவின் பட்டையை கிளப்பி இருப்பதாகவும், நிச்சயம் அவர் கோலிவுட் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என பலரும் பாராட்டும் அளவுக்கு டாடா அமைந்தது. இதனைத் தொடர்ந்து, ஓராண்டுக்குப் பிறகு கவின் நடிப்பில் வெளியானது ஸ்டார் திரைப்படம். இதன் ட்ரெய்லர் மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.
ஆனால் அதனை அந்த திரைப்படம் பூர்த்தி செய்யவில்லை. பிறகு நெல்சன் தயாரிப்பில், சிவபாலன் இயக்கத்தில் கவின் நடித்த பிளடி பெக்கர் திரைப்படமும் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகி மண்ணைக் கவ்வியது. இப்படியான சூழலில் கவின் அடுத்ததாக கிஸ் என்னும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்குனராக களம் இறங்கி இருக்கும் இந்தத் திரைப்படத்தின் சூட்டிங் பணிகள் சில மாதங்களுக்கு முன்பே முடிவடைந்து விட்டன.
ஆனால் இந்த திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமம் வியாபாரமாகாததால், ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இப்படியான சூழலில் தற்போது அனைத்தும் சுமூகமாக முடிவடைந்து இருப்பதாகவும், இதையடுத்து வரும் செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிஸ் திரைப்படத்தைத் தொடர்ந்து, வெற்றிமாறன் தயாரிப்பில் மாஸ் என்னும் திரைப்படத்தில் கவின் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.





