குட் பேட் அக்லி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் நான்கு நாட்கள் தான் இருக்கிறது. படத்தின் முன்பதிவும் தொடங்கிவிட்டது. சென்னையில் ஒவ்வொரு திரையரங்குகளிலும் ஆன்லைன் முன்பதிவு தொடங்கப்பட்டு வருகிறது. ஆரம்பித்த வேகத்தில் டிக்கெட்டுகளை அஜித் ரசிகர்கள் முன்பதிவு செய்து வருகிறார்கள்.
ஏற்கனவே இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. முழுக்க முழுக்க அஜித்குமாரையே அதில் காட்டி இருந்தார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். யூடியூபிலும் அது சாதனை படைத்தது. இருப்பினும் அந்த டீசரில் பிற நட்சத்திரங்கள் இல்லை என்ற ஒரு சின்ன ஏமாற்றம் பிற ரசிகர்களுக்கு இருந்து வந்தது.
இதனை போக்கும் விதமாக தற்போது சிறப்பான ட்ரெய்லரை கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். இரண்டு நிமிடங்கள் ஓடும் டிரைலர் முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களுக்காக மட்டுமே படைக்கப்பட்டு இருக்கிறது. இருப்பினும் படத்தின் வில்லன்கள் யார் என்பதையும், பிற நட்சத்திரங்களையும் அறிவித்துவிட்டார் ஆதிக்.
எடுத்து எடுப்பிலேயே ஒத்த ரூபாய் தாரேன் எனும் ரெட்ரோ பாடல் பின்னணியில் ஒலிக்க, அர்ஜுன் தாஸ் வில்லன் கெட்டப்பில் அலற விடுகிறார். அவர்தான் படத்தின் மெயின் வில்லன் என்பது ட்ரெய்லரை பார்க்கும்போது தெளிவாக தெரிந்து விட்டது. இதுபோக அஜித் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் பழைய திரைப்படங்களின் டயலாக்குகளையும் வைத்திருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன்.
ஜெயிலுக்குள் அஜித் குமார் பேசும் தீனா திரைப்பட டயலாக் தெறிக்க விடுகிறது. படத்தில் அஜித்குமாருக்கு மனைவியாக திரிஷா நடித்திருக்கிறார். இவர்களுக்கு மகனாக நடித்திருக்கிறார் கார்த்திகேயா தேவ். தனது மகனுக்கு ஒன்று என்றால் வயலன்ட்டை கையில் எடுப்பேன் என்று அஜித் கூறும் டயலாக் கவனம் பெறுகிறது.
பிரபு, யோகி பாபு, பிரசன்னா, ரெடின் கிங்ஸ்லி, சுனில் உள்ளிட்டோரும் படத்தில் இருக்கிறார்கள். ட்ரைலரின் இறுதியில் சிம்ரனும் வருகிறார். முன்னோட்டத்தை பார்த்த பலரும் இது அஜித்தின் mash up ஆக உள்ளது என்று தெரிவித்துள்ளனர். விடாமுயற்சி ஏற்கனவே கலவையான விமர்சனத்தை பெற்ற நிலையில் நிச்சயம் இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் அடிக்கும் என்று ஏகே ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.





