சின்னத்திரையில் இருந்து கொண்டு தன்னைக் கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கி வெள்ளி திரைக்கு வந்தவர் நடிகர் கவின். அவர் சினிமாவில் பளிச்சிடுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது பிக் பாஸ் நிகழ்ச்சி. அதன் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்ற அவர், வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்தார்.
கதாநாயகனாக அறிமுகமான லிப்ட் திரைப்படம், அவருக்கு நல்ல பெயரையே பெற்றுக் கொடுத்தது. இருப்பினும் திரைப்படம் வசூல் ரீதியாக எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இருப்பினும் கதாநாயகன் என்ற அந்தஸ்திற்கு, அவருக்கு போதுமான வரவேற்பு இதில் கிடைத்தது.
இதன் பிறகு கவின் நடித்த டாடா திரைப்படம், அவரைத் திரையுலகில் அடுத்த கட்டத்திற்கு கைப்பிடித்து அழைத்துச் சென்றது. இரண்டாவது படம் என்பது எங்குமே தெரியாத அளவுக்கு, தனது முதிர்ச்சியான நடிப்பை அந்த அளவிற்கு செட்டிலாக காட்டியிருந்தார் நடிகர் கவின். குறிப்பாக இரண்டாம் பாதியில் அவரது நடிப்பு பல இடங்களில் கவனிக்கும் வகையில் அமைந்தது.
கவின் நடிப்பு மட்டுமல்ல, படத்திலும் ஏராளமான நல்ல விஷயங்கள் இருந்ததால் டாடா திரைப்படம் வெற்றி பெற்றது. குறைந்த செலவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து அவர் பியார் பிரேமா காதல் படத்தின் இயக்குனர் இளனுடன் இணைந்தார்.
ஸ்டார் எனும் பெயரில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம், கடந்த பத்தாம் தேதி வெளியானது. இதன் ட்ரெய்லர் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டதால் படத்திற்கு, நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இதனை ஸ்டார் திரைப்படம் பூர்த்தி செய்யவில்லை என்று தான் கூற வேண்டும். விமர்சன ரீதியாக இந்த திரைப்படம் அந்த அளவு வரவேற்பை பெறவில்லை.
இந்த நிலையில் கவின் அடுத்ததாக கிஸ் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இதனை இயக்கியுள்ளார். அதன் பிறகு, நெல்சன் தயாரிப்பில் ப்ளடி பெக்கர், வெற்றிமாறன் தயாரிப்பில் மாஸ்க் ஆகிய படங்களிலும் அவர் நடித்து வருகிறார். இந்நிலையில் லியோ திரைப்படத்தை தயாரித்த, செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் கீழ் ஒரு படத்தில் கவின் கமிட் ஆகி இருக்கிறார். இந்த படத்தை பாடலாசிரியர் விஷ்ணு எடவன் இயக்குகிறார். இதில் கவினுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனைக் கேட்டு கவினின் ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.





