நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் வரும் 9ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ஜனநாயகன் படத்துக்கு இந்த நிமிடம் வரை சென்சார் சான்றிதழ் வழங்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு மத்தியில் ஆளும் பாஜக மற்றும் தமிழகத்தை ஆளும் திமுக அரசுதான் காரணம் என்ற புகாரும் பரவலாக இருந்து வருகிறது.
ஏனெனில் ஆளுங்கட்சி திமுகவை எதிர்த்து அரசியல் நடத்தி வரும் தவெக தலைவர் விஜய் ஆளுங்கட்சியை அரசியல் எதிரி என்கிறார். மத்தியில் ஆளும் பாஜக அரசை ஒன்றிய அரசு என்று குறிப்பிடுவதோடு என்னுடைய கொள்கை எதிரி என்றும் தொடர்ந்து கடுமையாக பேசி வருகிறார். இது அந்த 2 கட்சிகளுக்கும் பயங்கர வெறுப்பை விஜய் மீது ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழலில் ஜனநாயகன் படத்துக்கு சென்சார் போர்டு தணிக்கை சான்றிதழ் தராமல் இழுத்தடித்து வருகிறது. கடந்த டிசம்பர் 19ம் தேதி ஜனநாயகன் படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள், சண்டை காட்சியில் மட்டுமே சில காட்சிகளை நீக்க சொல்லி இருக்கின்றனர். அவர்கள் சொன்னபடி அந்த காட்சிகளை நீக்கிய படக்குழு கடந்த டிசம்பர் 24ம் தேதி படத்தை மீண்டும் தணிக்கைக்குழு பார்வைக்கு அனுப்பியது.
இந்நிலையில் ஒரு வாரத்துக்கு மேலாகியும் சென்சார் சான்றிதழ் தருவதற்கான எந்த அறிகுறியும் சென்சார் போர்டில் இல்லை. இது படக்குழுவினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதனால் பொங்கலுக்கு படம் வெளியாகுமா என்பதே கேள்வியாகி உள்ளது. ஏனெனில் சென்சார் போர்டு சான்றிதழ் இல்லாமல் படத்தை தியேட்டர்களில் திரையிட முடியாது. அது சட்டப்படி விதிமுறை மீறலாகும்.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் பாஜக மாநில துணைத் தலைவர் நடிகை குஷ்பு செய்தியார்களிடம் கூறியதாவது, ஜனநாயகன் படத்துக்கு சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை என்றால் அது தனிப்பட்ட அவர்களது பிரச்னை. தமிழ்நாட்டில் ஜனநாயகன் படத்துக்கு போதிய தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்றால் அதற்கு திமுக தான் பதில் சொல்ல வேண்டும்.
ஆனால் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததற்கும் பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஏனென்றால் தணிக்கை சான்றிதழ் வழங்கும் அமைப்பு தனிப்பட்ட முறையில் செயல்படுகிறது. அது அந்த அமைப்பின் விதிமுறைகளுக்கு உட்பட்டது. படம் நன்றாக இருந்தால் சான்றிதழ் தரப் போகிறார்கள். படத்தில் பிரச்சனை என்றால் அதற்கு நாம் பதில் சொல்ல முடியாது. ஜனநாயகன் படத்துக்கு மட்டுமல்ல பராசக்தி படத்திற்கும் சான்றிதழ் வழங்குவதில் பிரச்சனை உள்ளதாக தெரிகிறது என்று நடிகை குஷ்பு கூறியிருக்கிறார்.





