தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் புழக்கம் அதிகரித்து விட்டதாக எதிர்கட்சிகள் தரப்பில் தொடர்ந்து திமுக அரசின் மீது குற்றச்சாட்டு எழுப்பி வருகின்றன. போதையில்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்று முழக்கமிடும் திமுக அரசு குறித்து அதிமுக பாஜக நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவை கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இதற்கிடையே சமீபத்தில் நடிகர்கள் ஸ்ரீகாந்த் கிருஷ்ணா ஆகியோர் போதைப் பொருள் விவகாரத்தில் சிக்கி கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வாங்கிய பயன்படுத்தியதாகவும் நடிகர் கிருஷ்ணா போதைப் பொருள் வாங்கி கொடுத்ததாகவும் போலீசார் விசாரணையில் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் இளம்பெண் ரிதன்யா என்பவர், திருமணமான 78 நாட்களில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்திருப்பதும் பெரிய அளவில் இணையத்தில் வைரலாகி உள்ளது. 300 பவுன் நகைகள் ரூ. 70 லட்சம் மதிப்பில் புதிய கார் வாங்கி கொடுத்து 2.5 கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமாக பெண் வீட்டார் திருமணத்தை நடத்தியுள்ளனர்.
ஆனால் இன்னும் 200 பவுன் நகை கேட்டு கணவன் கவின்குமார் மாமனார் ஈஸ்வரமூர்த்தி மாமியார் சித்ராதேவி ஆகியோர், ரிதன்யாவை டார்ச்சர் செய்ததால் அந்த பெண் விஷம் குடித்து உயிரிழந்தார். அதே போல் திருப்புவனம் பகுதியில் கோவில் காவலாளியாக இருந்த அஜீத்குமார் என்ற 27 வயது இளைஞரை, நகை திருடியதாக லாக்கப்பில் போலீசார் அடித்துக் கொன்ற அந்த சம்பவமும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து பாஜக நிர்வாகி நடிகை குஷ்பு கூறியதாவது, லாக்கப் மரணங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருகின்றன. இத்தகைய சம்பவங்கள் திமுக அரசின் தோல்வியை காட்டுகின்றன. இதற்கு முதல்வர் தான் பொறுப்பேற்க வேண்டும். லாக்கப் மரணங்கள் மட்டுமின்றி இன்று வரதட்சணை கொடுமையால் பல பெண்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதை பார்க்கும் போது கஷ்டமாக இருக்கிறது.
போதைப் பொருள் விவகாரத்தில் சினிமா துறையினரை மட்டுமே குறை குறை சொல்ல முடியாது. பள்ளி கல்லூரி உட்பட பல இடங்களிலும் போதைப் பொருட்கள் நடமாட்டம் உள்ளது. சினிமாவில் உள்ளவர்களும் சராசரி மனிதர்கள் தான். அவர்களுக்கும் போதைப் பழக்கம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. அவற்றை தடுக்க என்ன வழி என்பதை தான் பார்க்க வேண்டும் என்று நடிகை குஷ்பு கூறியிருக்கிறார்.





