நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் அதாவது நடிகர் தனுஷின் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த், சினிமா டைரக்ட் செய்வதில் அதீத ஆர்வம் கொண்டவர். ஆனால் ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ் ஸ்ருதிஹாசன் நடித்த 3 படம் வெளியாகி தோல்வியடைந்தது. அடுத்து அவர் இயக்கிய 2வது படம் கௌதம் கார்த்திக் நடித்த வை ராஜா வை படமும் படுதோல்வியை சந்தித்தது.
எனினும் விக்ரமாதித்யன் வேதாளம் கதை போல மனம் தளராத இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், 3வது இயக்கிய படம்தான் லால் சலாம். லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில் விஷ்ணு விஷால் விதார்த் முன்னணி கேரக்டர்களில் நடித்த இந்த படம் கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியானது. இந்த படமும் படுதோல்வியை சந்தித்தது.
படம் முழுவதும் 45 நிமிடங்களுக்கு மேல் இந்த படத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்தும் இந்த படம் ஓடவில்லை. இந்த படத்தை ரஜினியின் தீவிர ரசிகர்கள் கூட பார்க்கவில்லை. அதுமட்டுமின்றி ரஜினி கேமியோ ரோலில் நடிக்கும் படங்கள் மிக மோசமான தோல்வியை சந்திக்கும் என்ற ஒரு சென்டிமென்டும் தமிழ் சினிமாவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
லால் சலாம் படம் ஷூட்டிங் முடிந்த பிறகு படம் ரிலீஸ் செய்ய அதிக நாட்கள் தாமதம் ஏற்பட்டது. அப்போது படத்தின் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், இந்த படத்தின் முக்கிய காட்சிகள் அடங்கிய ஹார்டு டிஸ்க் காணாமல் போய்விட்டது. அந்த காட்சிகளை திரும்ப எடுக்க வேண்டும். அல்லது அந்த காட்சிகள் இல்லாமல் படத்தை வெளியிட வேண்டும் என்று கூறிய நிலையில், அப்படியே தான் அந்த படம் வெளியானது.
வழக்கமாக ஒரு படம் தியேட்டரில் ரிலீஸானால் அடுத்த 4 வாரங்கள் அல்லது 8 வாரங்களில் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகி விடுவது வழக்கம். ஆனால் ஹார்டு டிஸ்க் தொலைந்து போன நிலையில், தியேட்டர்களிலும் போதிய வரவேற்பை பெறாத லால் சலாம் படத்தை டிஜிட்டல் ரைட்ஸ் வாங்க ஓடிடி நிறுவனங்கள் முன்வரவில்லை. இதனால் ஓராண்டு கடந்தும் இந்த படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகவே இல்லை.
இந்நிலையில், லால் சலாம் படப்பிடிப்பின் போது காணாமல் போன ஹார்டு டிஸ்க் சமீபத்தில் கிடைத்துவிட்டதாகவும். அதில் இருந்த முக்கிய காட்சிகள் அனைத்தும் படத்தில் சேர்க்கப்பட்டு, மீண்டும் எடிட் செய்யப்பட்டு படம் சென்சார் செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சென்சாருக்கு பிறகு சேர்க்கப்பட்ட புதிய காட்சிகளுடன் பொலிவுடன் லால் சலாம் ஓடிடி தளத்தில் மிக விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஒருவேளை லால் சலாம் படம் ஓடிடி தளத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற வாய்ப்புள்ளதால், ரசிகர்கள் பார்த்தால்தான் அது சாத்தியம் என்றும் கூறப்படுகிறது.





