இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு, தளபதி விஜய் நடித்த வாரிசு மற்றும் அஜித் குமார் நடித்த துணிவு ஆகிய திரைப்படங்கள் வெளியாகின. பண்டிகை நாளில், மிகப்பெரும் எதிர்பார்ப்பில் முக்கிய நட்சத்திரங்கள் நடிப்பில் வெளிவந்த இந்த இரண்டு திரைப்படங்களையும் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். திரையரங்குகள் திருவிழா கோலம் பூண்ட நிலையில், ஆட்டம் பாட்டம் எனக் கொண்டாட்டங்கள் களைகட்டின.
ஆனால் விமர்சன ரீதியாக இந்த இரண்டு திரைப்படங்களும் சுமாரான வரவேற்பை பெற்றது. அதேசமயம் வசூலில் இரண்டு திரைப்படங்களும் எந்த ஒரு குறையும் வைக்காமல் சக்கை போடு போட்டன. இதற்குப் பிறகு, தமிழ் சினிமாவில் அடுத்ததாக வந்த பெரிய திரைப்படம் எதுவென்றால் அது பொன்னியின் செல்வன் படத்தின் பாகம் இரண்டு.
இந்த திரைப்படம் முதல் பாகத்தை ஒப்பிட்டுப் பார்க்கையில் பெரிய வரவேற்பை பெறவில்லை. தொடர்ந்து விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் வெளியானது. தீபாவளிக்கு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், மற்றும் கார்த்தியின் ஜப்பான் ஆகிய திரைப்படங்கள் வெளிவந்தன. ஆனால் முக்கிய நாளில் எந்த ஒரு பெரிய நட்சத்திரங்கள் படமும் வெளியாகவில்லையே என ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
இப்படியான சூழலில்தான் வரும் பொங்கலுக்கு தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் லால் சலாம் ஆகிய திரைப்படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. இதில் கேப்டன் மில்லர் திரைப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியிருக்கிறார். இதற்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், டிசம்பர் 15ஆம் தேதி படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் திடீரென அதன் ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனம் தள்ளி வைத்து பொங்கலுக்கு வெளியாவதாக அறிவித்தது. இதே போல், சிவகார்த்திகேயன் நடித்து பல ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் அயலான் திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஏலியன் கான்செப்ட்டை இந்த படம் கையில் எடுத்திருப்பதால் இதற்கு ஆரம்பத்தில் இருந்தே ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது. இதனால் பொங்கலுக்கு இந்த படத்தை இறக்கினால் குடும்ப ஆடியன்ஸ்களின் வரவேற்பு கிடைக்கும் என கணித்து சிவகார்த்திகேயன் செயல்பட்டு வருகிறார்.
இவர்களுடன் லால் சலாம் படமும் பொங்கல் ரேஸில் இணைந்தது. ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்கி இருக்கும் இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார், சிறப்பு தோற்றத்தில் வருகிறார். இதில் டீசரும் சொல்லிக் கொள்ளும் வகையில் இருந்ததால், ரஜினி ரசிகர்கள் லால் சலாம் உடன் பொங்கலை கொண்டாடலாம் என எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் போஸ்ட் ப்ரடக்ஷன் பணிகள் இன்னும் மீதம் இருப்பதால், படத்தை ஜனவரி 26 ஆம் தேதி வெளியிடப்பட குழு திட்டமிட்டு இருக்கிறதாம். இது ஒரு பக்கம் இருக்க, சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் அரண்மனை படத்தின் நான்காம் பாகம் பொங்கலுக்கு வெளியாவதாக கூறப்படுகிறது. இதனால் பொங்கல் திருநாளில் கேப்டன் மில்லர் அயலான் மற்றும் அரண்மனை படத்தின் நான்காம் பாகம் ஆகியவை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.





