ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா டைரக்ட் செய்த படம் லால் சலாம். இந்த படத்தில் கேமியோ ரோலில் ரஜினிகாந்த் நடித்திருக்கிறார். முதலில் இந்த படத்தில் ரஜினி நடிக்கும் திட்டம் இல்லை. எனினும் படத்துக்கு பெரிய சப்போர்ட் தேவை என்பதால், இதில் தனது அப்பா ரஜினியை நடித்து தருமாறு ஐஸ்வர்யா அழைத்திருக்கிறார்.
கணவர் தனுஷை கருத்து வேறுபாடுகளால் பிரிந்து வாழும் நிலையில், ஐஸ்வர்யாவுக்கு மனமாற்றம் தேவை என்ற நிலையை உணர்ந்து, லால் சலாம் படத்தில் ரஜினி நடிக்க சம்மதித்து இருக்கிறார். இது சாதாரண ஒரு படமாக இல்லாமல், தனது மகளுக்கு டைரக்டராக பெரிய புகழ் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் இந்த படத்தில் ரஜினி நடித்திருக்கிறார்.
இந்த படத்தில் ரஜினி மகனாக விக்ராந்த் நடித்திருக்கிறார். விஷ்ணு விஷால், தம்பி ராமையா உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். லைக்கா புரடக்சன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் ரஜினிக்கு சண்டை காட்சிகளும், மாஸ் ஆன டயலாக் பேசும் சூப்பர் சீன்களும் படத்தில் இருக்கின்றன.
இந்த சூழலில் லால் சலாம் படத்துக்காக டிஜிட்டல் ரைட்ஸ், சாட்டிலைட் ரைட்ஸ் போன்றவை எதிர்பார்த்த அளவுக்கு கிடைக்கவில்லை. அதாவது ரஜினி படத்துக்கான ஒரு பெரிய வருவாயை எதிர்பார்த்தவர்களுக்கு அந்தளவுக்கு இந்த படத்துக்கு விலை தர முடியாது என வெளிப்படையாகவே ஓடிடி நிறுவனங்கள், சாட்டிலைட் நிறுவனங்கள் கூறி விட்டன.
இதனால்தான் கடந்த டிசம்பர் மாதம் வெளியாக வேண்டிய லால் சலாம், பொங்கல் பண்டிகைக்கு தள்ளி வைக்கப்பட்டது. அதன்பிறகு இப்போது பிப்ரவரி 9ம் தேதி மாற்றி வைக்கப்பட்டுள்ளது. அப்போதும் சாட்டிலைட் உரிமம், டிஜிட்டஸ் ரைட்ஸ் விற்பனையானால் மட்டுமே, படத்தை ரிலீஸ் செய்யும் முடிவில் தயாரிப்பு நிறுவனம் இருந்து வருகிறது.
ரஜினி நடித்த படத்துக்கே இந்த நிலைமையா என்ற சூழலில், பலரும் அதிர்ச்சியடைந்தனர். இந்த தகவல் ரஜினியின் காதுகளுக்கும் எட்டியுள்ளது. இதையடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் கலாநிதி மாறனிடம் ரஜினிகாந்த் பேசி இருக்கிறார். ரஜினியே கேட்டு விட்டாரே, என அவரும் ஒத்துக்கொள்ள இப்போது லால்சலாம் சாட்டிலைட் உரிமத்தை சன்பிக்சர்ஸ் வாங்கிவிட்டது. ஆனால் ஓடிடி வாங்க இன்னும் யாரும் முன்வரவில்லை. அது முடிவான பிறகே, லால் சலாம் படத்தின் ரிலீஸ் தேதியும் உறுதியான முடிவுக்கு வரும்.





