தமிழ் சினிமாவில் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்திய படங்கள் பெரும்பாலும் வெற்றி பெற்று விடுகின்றன. குறிப்பாக சென்னை 28, சென்னை 28 படம் 2ம் பாகம் போன்ற படங்கள் ஜெயித்தன. அதே போல் இப்போது வெளிவந்துள்ள லப்பர் பந்து படமும் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. ஆனால் விதிவிலக்காக கிரிக்கெட்டை மையப்படுத்திய லால் சலாம் படம் வெற்றி பெறவில்லை.
புதுமுக அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கிய படம் லப்பர் பந்து. இந்த படம், கடந்த வாரம் 20ம் தேதி வெளியானது. இந்த படத்துக்கு படம் ரிலீஸான முதல் நாளில் இருந்தே, நல்ல வரவேற்பும் ஆதரவும் கிடைத்து வருகிறது. படம் வெளியான 6 நாட்களில் இதுவரை இந்த படம் 9.5 கோடி ரூபாய் வரை வசூலில் கடந்துள்ளது.
இந்த படத்தில் அட்டக்கத்தி தினேஷ், ஹரீஷ் கல்யாண் இரட்டை நாயகர்களாக நடித்துள்ளனர். படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த படத்தில் சஞ்சனா, சுவாசிகா, பால சரவணன், ஜென்சன், தேவதர்ஷினி, காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
லப்பர் பந்து படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும், படத்தின் திரைக்கதை, கதைக்களம், யதார்த்த நடிப்பு என இந்த படம் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது. காக்கா முட்டை, குட்நைட், சித்தா, வாழை படங்களின் வரிசையில் இப்போது லப்பர் பந்து படமும் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் இந்த படத்தில், விஜயகாந்த் நடித்த பொன்மனச் செல்வன் படத்தில் இடம்பெற்ற நீ பொட்டு வெச்ச தங்க குடம், ஊருக்கு மணிமகுடம் என்ற பாடல் வருகிறது. இந்த காட்சியும், பாடலும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. நாளுக்கு நாள் ரசிகர்களிடம் இந்த படத்துக்கு கிடைத்து வரும் கவனமும், ஈர்ப்பும் இன்னும் பலமடங்கு வசூலை பெற்றுத் தரும் என்று தெரிய வந்துள்ளது.
பார்க்கிங் படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி, ஹரீஷ் கல்யாண் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். இப்போது லப்பர் பந்து படமும் அவருக்கு பெரிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றுத் தந்திருக்கிறது. இதுபோன்ற நல்ல கதையம்சம்சம் உள்ள படங்களை அவர் தேர்வு செய்து நடிப்பது, முக்கிய அடையாளத்தை தமிழ் சினிமாவில் அவருக்கு தந்து வருகிறது. தொடர்ந்து லப்பர் பந்து கிடைத்து வரும் ஆதரவும், அதை உறுதிப்படுத்துகிறது.





