சூர்யா பெரிதும் எதிர்பார்த்து இருந்த கங்குவா திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி படுதோல்வியை சந்தித்தது. இருப்பினும் தனது அடுத்தடுத்த திரைப்படங்களில் அவர் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இதில் அவர் கார்த்திக் சுப்பராஜுடன் ரெட்ரோ திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.
இதில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருக்கிறார். ஆக்ஷன் கலந்த காதல் திரைப்படமாக இது உருவாகிறது. கேங்ஸ்டர் ஆக இருக்கும் சூர்யா, தனது காதலிக்காக அனைத்தையும் விட்டுவிட்டு வருவது தான் இந்த திரைப்படத்தின் கதை சுருக்கம் என்று கூறப்படுகிறது. அதனை உணர்த்துவது போலவே ரெட்ரோ திரைப்படத்தின் டீசரும் அமைந்திருந்தது.
சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம், வரும் ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து தனது 45 ஆவது படத்திற்கான பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. ஆர் ஜே பாலாஜி தான் இந்த திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இதில் கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார். லப்பர் பந்து திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்த சுவாசிகா இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதுபோக மலையாள நடிகர் இந்திரன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலரும் படத்தில் இடம்பெற்று இருக்கிறார்கள். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு கோவை மாவட்டத்தில் முழு வீச்சில் நடைபெற்றது.
இதுவரை 40 சதவீத பணிகள் நிறைவடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்ததாக சென்னைக்கு படக்குழுவினர் நகர்ந்து இருக்கிறார்கள். அங்குள்ள பிரசாந்த் ஸ்டூடியோவில் தற்போது ஷூட்டிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக மிகப்பிரமாண்டமான செட் போடப்பட்டு இருக்கிறதாம். ஆனால் அதில் சூர்யா பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.
வில்லன்களுக்கான பாடல் காட்சிக்காகத்தான் இந்த செட் உருவாக்கப்பட்டுள்ளதாம். இதில் மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உள்ளார்களாம். இதனைத் தொடர்ந்து அதே இடத்தில் பத்து நாட்கள் சண்டைக்காட்சி நடைபெற இருப்பதாக கூறுகிறார்கள். அதில் தான் கதாநாயகன் சூர்யா பங்கேற்க இருக்கிறாராம். ஃபேண்டஸி திரைப்படம் ஆக இது உருவாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





