தமிழக சட்டசபை தேர்தல் நேற்று அமைதியாக நடந்து முடிந்த நிலையில் 85 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் தமிழ்நாடு முழுவதும் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக இதுவரை 78 சதவீதம் மட்டுமே தமிழ்நாட்டில் அதிக ஓட்டுப்பதிவாக இருந்த நிலையில் இந்த முறை 85 சதவீதம் வரை அது கடந்திருப்பது குறித்து நடிகர் விஜய் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். அரசியல் என்பது ஏதோ அசகாய சூரர்களுக்கானது மட்டுமே. அதீத அனுபவசாலிகளுக்கானது மட்டுமே. பதவிகளை அனுபவிப்பவர்களுக்கானது மட்டுமே.
இப்படி அரசியலை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுப்படுத்தியும் கட்டுப்படுத்தியும் வைத்தவர்களின் மாயாஜாலக் கணக்குகள், சாதாரண வெகுஜன மக்களால் உடைத்து நொறுக்கப்பட்டுள்ளன. அரசியலைக் கண்டுகொள்ளவே மாட்டார்கள் என்று இதுவரை அனுமானிக்கப்பட்ட இளைஞர்களும் பெண்களும் அரசியல் பேசத் தொடங்கிய அதிசயமும் அவசியமும் நிகழத் தொடங்கிவிட்டது.
இது எப்போது இருந்து தொடங்கியதென நடுநிலை மனம்கொண்டோர் அனைவரும் உணர்வர்.இதுவரை பெருமளவிலான குறிப்பிட்ட சதவிகித வாக்குகள், வாக்குச்சாவடி பக்கமே வராமல் இருந்தன. ஆனால், 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு, தமிழகத் தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வரலாற்று நிகழ்வாகப் பதிவாகி உள்ளது.
85 சதவீதம் வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்நாடு காணாத ஒன்று. வாக்குச்சாவடிகள் எங்கும் கோவில்களில் காணப்படும் கூட்டம்போல, குடும்பம் குடும்பமாகக் குழந்தை குட்டிகளுடன் வந்து வாக்களித்ததைக் கண்டு வியக்காதோர் எவரும் இருக்கவே வாய்ப்பில்லை. அது மட்டுமா?.
வெளிமாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வாக்களிப்பதற்காகவே பெரும்பொருள் செலவு செய்து வந்த ஜனநாயகர்களை இருகரம் கூப்பி வணங்காமல் இருக்க முடியுமா? தேர்தல் திருவிழா என்றும் ஜனநாயகத் திருவிழா என்றும் சொல்லப்படுவதன் அர்த்தம் சுகப்பட்டதே நேற்றுதான். இந்த 2026 ஏப்ரல் 23 தான். எனினும் இது ஒரு தொடக்கம் மட்டுமே என்று விஜய் அந்த பதிவில் கூறியிருக்கிறார்.





