எப்போதுமே நாயகன் அல்லது நாயகியின் கடந்த கால பள்ளி வாழ்க்கை அல்லது கல்லூரி வாழ்க்கையை கதைக்களமாக கொண்ட பெரும்பாலான படங்கள் பெரிய அளவில் ஜெயித்திருக்கின்றன. அதற்கு காரணம் அப்படிப்பட்ட திரைக்களத்தில் உருவாகும் படங்களை பார்க்கும் போது பல ரசிகர்கள் தங்களது பள்ளி, கல்லூரி கால வாழ்க்கையை நினைவுகளில் அசை போட ஆரம்பித்து விடுகின்றனர்.
அதனால்தான் சேரன் இயக்கிய ஆட்டோகிராப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதே போல் தங்கர் பச்சான் இயக்கிய அழகி மற்றும் பள்ளிக்கூடம் படங்களும் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. மாரி செல்வராஜ் இயக்கிய வாழை படம் கூட பலரது பள்ளி நாட்களை கண்முன் கொண்டு வந்தது.
கடந்த 2018ம் ஆண்டில் இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி திரிஷா நடித்த படம் 96 இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. குறிப்பாக ஜானு கேரக்டரில் இந்த படத்தில் திரிஷா வாழ்ந்து காட்டியிருந்தார். விஜய் சேதுபதியின் நடிப்பும் வேற லெவலில் இருந்தது. ஜனகராஜ் தேவதர்ஷினி போன்றவர்களின் நடிப்பும் படத்துக்கு பலம் சேர்த்தது.
இதே படத்தை தெலுங்கில் ஜானு என்ற பெயரில் டைரக்டர் பிரேம்குமார் இயக்கினார். இந்த தெலுங்கு ரீமேக்கில் சர்வானந்த் சமந்தா ஆகியோர் விஜய் சேதுபதி திரிஷா கேரக்டரில் நடித்தனர். தெலுங்கிலும் இந்த படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்த நிலையில் அடுத்து அரவிந்த் சாமி, கார்த்தி நடித்த மெய்யழகன் படத்தை அவர் இயக்கி அந்த படமும் பெரிய வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் 96 படத்தின் 2ம் பாகம் எப்போது உருவாகும் என்று தொடர்ந்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வரும் நிலையில் அதுகுறித்து இயக்குனர் பிரேம்குமார் கூறியதாவது, 96 படத்தின் 2ம் பாகத்துக்கான ஆரம்ப கட்ட பணிகள் இப்போது நடந்து வருகிறது. இந்த 2ம் பாகத்திலும் விஜய் சேதுபதி திரிஷா தான் நடிக்கின்றனர். படத்தின் கதையை கேட்டவுடன் இருவரும் ரொம்பவும் இம்பரஸ் ஆகி ஓகே சொல்லி விட்டனர்.
அதனால் 96 படத்தின் 2ம் பாகம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அவர் உறுதியாக கூறியிருக்கிறார். இப்போது விஜய் சேதுபதி திரிஷா இருவருமே ஏகப்பட்ட படங்களில் கமிட் ஆகி பிஸியாக நடித்து வருகின்றனர். அதனால் இந்த படத்தின் ஷூட்டிங் துவங்க இன்னும் சில மாதங்கள் ஆகலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.





