அட்டக்கத்தி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பா ரஞ்சித். முதல் படமே பெரிய வரவேற்பை பெற்றுத் தந்த நிலையில், அவரது 2வது படம் மெட்ராஸ் படம் பெரிய வெற்றியை பெற்றது. தொடர்ந்து ரஜினிகாந்த் நடித்த கபாலி காலா படங்களை பா ரஞ்சித் இயக்கினார். தமிழ் சினிமாவில் நட்சத்திர இயக்குனராக மாறினார். பிறகு பல படங்களை தனது நீலம் புரடக்சன்ஸ் என்ற நிறுவனம் மூலம் தயாரிக்கவும் ஆரம்பித்தார்.
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் கடந்த 2021ம் ஆண்டில் வெளியான படம் சார்பட்டா பரம்பரை. இந்த படம் தியேட்டர்களில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. சார்பட்டா பரம்பரை படத்தில் ஆர்யா துஷாரா விஜயன் பசுபதி உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர்.
இந்த படம் தியேட்டர்களில் வெளியாகி இருந்தால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் சென்றடைந்திருக்கும். இது தியேட்டரில் ரிலீஸாகி இருக்க வேண்டிய படம் என்று ஓடிடியில் படம் பார்த்து அனைவரும் ஆதங்கம் தெரிவித்தனர். ஏனெனில் குத்துச்சண்டையை மையமாக வைத்து கதை உருவாக்கி இருந்தாலும் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் என சில அரசியல் கருத்துகளையும் இந்த படம் பேசியிருந்தது.
தொடர்ந்து கடந்தாண்டு சார்பட்டா பரம்பரை 2 படம் குறித்த அறிவிப்பு வெளியானது. இது ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் அறிவிப்பு பின் இன்னும் படப்பிடிப்பு துவங்கப்படாமல் காலதாமதம் நீடிக்கிறது. படத்தின் பட்ஜெட் அதிகமாக இருப்பதாலும் தங்கலான் படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்ததாலும் சார்பட்டா பரம்பரை 2 படப்பிடிப்பை துவங்குவதில் சிக்கல் நீடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் பா ரஞ்சித் கூறியதாவது, சார்பட்டா பரம்பரை 2 கதையை எழுதி முடித்து விட்டோம். சில மாறுதல்களை மேற்கொண்டு படப்பிடிப்பை துவங்க இருக்கிறோம்.இந்தப் படமும் மிக முக்கியமான அரசியல் காலகட்டத்தையே பேசுகிறது. குத்துச்சண்டைக்கான காட்சிகளும் நன்றாக வந்திருப்பதால் பலருக்கும் இந்த கதை மிகவும் பிடிக்கும் என்று நம்புகிறேன் என்று இயக்குனர் பா ரஞ்சித் கூறியிருக்கிறார்.
தற்போது இயக்குனர் பா ரஞ்சித் வேட்டுவம் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ் நாயகனாகவும் ஆர்யா வில்லனாகவும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்ததும் சார்பட்டா பரம்பரை 2 படப்பிடிப்பு துவங்கும் என்று தெரிய வந்துள்ளது. எப்படியும் இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது 2026ம் ஆண்டின் துவக்கத்தில் சார்பட்டா பரம்பரை 2 படப்பிடிப்பு துவங்கிவிடும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.





