நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1996ம் ஆண்டில் வெளியான படம் இந்தியன். ஏஆர் ரகுமான் இசையில் உருவான இந்த படம் மாஸ் ஹிட் படமாக இருந்தது. கமல்ஹாசன் 2 வேடங்களில் நடித்திருந்தார். சுகன்யா மனிஷா கொய்ராலா ஊர்மிளா கஸ்தூரி கவுண்டமணி செந்தில் நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர்.
இந்தியன் படத்தில் சேனாபதி முதியவர் கேரக்டரில் நடித்த இந்தியன் தாத்தா கமலுக்கு மத்திய அரசின் தேசிய விருது கிடைத்தது. நாயகன் மூன்றாம் பிறை படங்களுக்கு பிறகு கமலுக்கு இந்தியன் படம் 3வது முறையாக தேசிய விருதை பெற்றுத் தந்தது. இப்போதும் ஏஆர் ரகுமான் இசையில் இந்தியன் படப் பாடல்கள் ரசிகர்களை வெகுவாக ரசிக்க வைக்கின்றன.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக இந்தியன் 2 இந்தியன் 3 படங்கள் உருவானது. 28 ஆண்டுகளுக்கு பின் இந்தியன் படத்தை 2ம் பாகமாக 3ம் பாகமாக ஒரே நேரத்தில் படப்பிடிப்பை நடத்தினார் இயக்குனர் ஷங்கர். இதில் 2 பாகங்களை ஒரே நேரத்தில் எடுத்ததால் கதை திரைக்கதையில் பயங்கர சொதப்பல் ஏற்பட்டது.
அதனால் கடந்தாண்டில் வெளியான இந்தியன் 2 படம் பலத்த தோல்வியை சந்தித்தது. கதை திரைக்கதை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்பதும் மேக்கப் என்ற பெயரில் கமல்ஹாசனை பல இடங்களில் அடையாளமே தெரியாமல் அலங்கோலப்படுத்தி இருந்ததும் ரசிகர்களை விரக்தியடைய செய்தது.
இந்நிலையில் இந்தியன் 3 படம் குறித்து பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. படத்தை தயாரித்த லைகா நிறுவனம் இந்த படத்தை விட்டு விலகியதாகவும், இந்தியன் 3 படம் ஷூட்டிங் நிதியாதாரம் இல்லாமல் பாதியில் நிற்பதாகவும் ஷங்கர் இந்த படத்தின் மீதி காட்சிகளை எடுக்க மறுப்பதாகவும் என பல தகவல்கள் அடிக்கடி வெளியாகி வைரலாகின்றன.
இந்த சூழலில் வந்த லேட்டஸ்ட் தகவலின்படி, இந்தியன் 3 படம் கண்டிப்பாக ரிலீஸ் செய்யப்பட திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. நடிகர் கமல்ஹாசன் 20 முதல் 25 நாட்கள் நடிக்க வேண்டிய காட்சிகள் இருப்பதால், அவர் வெளிநாட்டில் இருந்து வந்தவுடன் ஷூட்டிங் நடத்தப்பட உள்ளது. ராஜ்ய சபா எம்பியாக கமல் பதவிக்கு வந்தாலும் ஷூட்டிங்கில் பங்கேற்பார் என்றும் சொல்லப்படுகிறது. வெளிநாட்டில் இருந்து வரும் கமலின் பதிலுக்காக இந்தியன் 3 படக்குழு காத்திருக்கிறது.





