வேட்டையன் படத்துக்கு பிறகு அடுத்து நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் கூலி. சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் டைரக்ட் செய்திருக்கிறார். இந்த படத்தில் ரஜினிகாந்த் நடிக்க வேண்டிய காட்சிகள் அனைத்தும் நடித்து முடித்து விட்ட நிலையில், மற்றவர்கள் நடிக்கும் காட்சிகள் இப்போது படமாக்கப்பட்டு வருகின்றன.
இன்னும் சில வாரங்களில் கூலி படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து அதன் பிறகு போஸ்ட் புரடக்சன்ஸ் பணிகள் துவங்கப்பட உள்ளது. இந்த படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் அடுத்து கைதி 2 படப்பிடிப்பை துவங்க உள்ளார். இந்த ஆண்டு இறுதிக்குள் படப்பிடிப்பு துவங்கி விடும் என்று கூறப்படுகிறது. அதற்கு முன் ஸ்கிரிப்ட் ரைட்டிங் உள்ள ப்ரீ புரடக்சன்ஸ் பணிகள் நடக்கின்றன.
இந்நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் 2 படப்பிடிப்பு துவங்கி சென்னையில் நடந்து வருகிறது. இதில் முதல்கட்டமாக 15 நாட்கள் ரஜினிகாந்த் கால்ஷீட் கொடுத்திருக்கிறார். முதல் 5 நாட்கள் சென்னையில் அடுத்த 10 நாட்கள் ஐதராபாத்திலும் நடக்கும் ஜெயிலர் 2 ஷூட்டிங்கில் ரஜினி கலந்துக்கொள்கிறார்.
கடந்த 2023ம் ஆண்டில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற ஜெயிலர் படத்தின் தொடர்ச்சியாக தான் இந்த ஜெயிலர் 2 படம் உருவாகிறது. அதனால் அந்த படத்தில் நடித்த முக்கிய நடிகர் நடிகைகள் இந்த படத்திலும் நடிக்க அதிக வாய்ப்புள்ளது. குறிப்பாக மோகன்லால் சிவராஜ்குமார் ஜாக்கி ஷெராப் ரம்யா கிருஷ்ணன் யோகிபாபு உள்ளிட்டோர் ஜெயிலர் 2 படத்திலும் நடிக்க அதிக வாய்ப்புள்ளது.
சென்னையை அடுத்துள்ள விருகம்பாக்கம் ஆவின்பூத் பகுதியில் உள்ள பெரிய மைதானத்தில் காலியிடத்தில் ஒரு கிராமம் போன்ற செட் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு ஒரு பிரமாண்ட வீடு செட் அமைத்து அதில் நெல்சன் திலீப்குமார் ஜெயிலர் 2 படப்பிடிப்பை நடத்தி வருகிறார். இங்கு நடிகர் ரஜினிகாந்துடன் யோகிபாபு நமோ நாராயணா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
மேலும் ஜெயிலர் படத்தில் விருமனாக வில்லன் கேரக்டரில் நடித்த மலையாள நடிகர் விநாயகம் அந்த படத்தில், கொல்லப்பட்டு விடுவார். அதனால் ஜெயிலர் 2 படத்தில் வில்லனாக நடிகர் எஸ்ஜே சூர்யா நடிக்கிறார். இப்போது நடந்து வரும் படப்பிடிப்பில் எஸ்ஜே சூர்யா நடித்த சில காட்சிகளும் படமாக்கப்பட்டதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. ஜெயிலர் படம் ரூ. 600 கோடிக்கு மேல் வசூலித்த நிலையில், ஜெயிலர் 2 படம் 1000 கோடி ரூபாய் வசூலை எட்டும் என்றும் ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.





