நடிகர் மற்றும் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் வெளியான படம் மூக்குத்தி அம்மன். மாபெரும் வெற்றியை பெற்ற இந்த படத்தில் மூக்குத்தி அம்மனாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார். ஆர்ஜே பாலாஜி ஊர்வசி மௌலி உள்ளிட்டோரும் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருந்தது.
இப்போது அதே நிறுவனம், மூக்குத்தி அம்மன் 2 படத்தை தயாரிக்க உள்ளது. இந்த படத்தை இயக்குனர் சுந்தர் சி இயக்கி அவரே கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் மீண்டும் அம்மனாக நயன்தாரா நடிக்கிறார். ரெஜினா கசாண்ட்ரா துனியா விஜய் யோகிபாபு இனியா அபிநயா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்க உள்ளனர்.
பொள்ளாச்சியில் மிக விரைவில் ஷூட்டிங் துவங்கப்பட உள்ள நிலையில், மூக்குத்தி அம்மன் 2 படம் குறித்த சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த படம் முதலில் ரூ. 55 கோடி பட்ஜெட்டில் தான் உருவாக திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் திரும்ப திரும்ப படம் குறித்து பேசி பான் இந்தியா படமாக உருவாக்க திட்டமிட்டதில் இந்த படத்தின் பட்ஜெட் இப்போது ரூ. 112 கோடி என அதிகரித்துள்ளது.
சமீபத்தில் தனது 25வது ஆண்டு திருமண நாளில் இயக்குனர் சுந்தர் சி அவரது மனைவி குஷ்பு மற்றும் குடும்பத்துடன் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர். அப்போது இயக்குனர் சுந்தர் சி மொட்டையடித்து சுவாமிக்கு தனது நேர்த்திக் கடனை செலுத்தினார்.
மூக்குத்தி அம்மன் 2 படத்தின் நாயகன் சுந்தர் சி என்ற நிலையில் அவர் மொட்டையடித்து விட்டு படத்தில் எப்படி நடிப்பார் என்ற கேள்வி ரசிகர்களுக்கு எழுந்த நிலையில், அந்த படத்தில் மொட்டையடித்த கெட்டப்பில் சுந்தர் சி நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதனால் நேர்த்திக்கடனை செலுத்தியதுடன் சுந்தர் சி தனது படத்திலும் தனது நிஜ தோற்றத்தை கெட்டப் ஆக்கி கொண்டதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நயன்தாரா சம்பளம் ரூ. 10 கோடி என்ற நிலையில், அவர் அதில் பாதி சம்பளமாக ரூ. 5 கோடி மட்டுமே பெற்றுக் கொண்டதாகவும் மீதி சம்பளத்துக்கு பதிலாக பிராப்பர்டி ஷேர் என்ற வகையில் இந்த படம் ரிலீஸான பிறகு, அதில் கிடைக்கும் லாபத்தில் குறிப்பிட்ட ஷேர் பெற்றுக் கொள்ள இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. சம்பளமே வாங்காமல் பிராப்பர்டி ஷேர் பெறுவதே நடிகர்களின் வழக்கமாக உள்ள நிலையில் சம்பளத்துடன் பிராப்பர்டி ஷேரும் நயன்தாரா வாங்குவது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.





