நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வருகிற 14ம் தேதி வெளியாக உள்ள படம் கூலி. தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளை நடிகர் ரஜினிகாந்த் நிறைவு செய்யும் 2025ம் ஆண்டில் இது அவரது 171வது படமாக வெளிவருகிறது. பான் இந்தியா படமாக உருவான கூலி படத்தில் தெலுங்கு மலையாளம் இந்தி கன்னடம் மொழி பிரபல நட்சத்திர நடிகர்களும் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர்.
சமீபத்தில் கூலி படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், இந்த படத்தில் அமீர்கான் உபேந்திரா சௌபின் சாகிர் நாகர்ஜூனா சத்யராஜ் ஸ்ருதிஹாசன் போன்றவர்கள் நடித்தது குறித்தும் அவர்கள் பங்கேற்றுள்ள கேரக்டர்கள் குறித்தும் மிகவும் சிலாகித்து பேசியிருந்தார்.
உண்மையில் கூலி படத்தின் கதாநாயகன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்தான் என்றும் விழா மேடையில் நடிகர் ரஜினிகாந்த் வெளிப்படையாக பேசியது குறிப்பிடத்தக்கது. அதே போல் படத்தின் இசையமைப்பாளர் அனிருத், தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் குறித்தும் ரஜினிகாந்த் வெகுவாக பாராட்டிப் பேசியிருந்தார்.
இதற்கிடையே கூலி படத்துக்கான டிக்கெட் முன்பதிவு தமிழ்நாடு கேரளா கர்நாடகா ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் ஜரூராக நடந்து வருகிறது. கேரளாவில் 1 மணி நேரத்தில் ஒரு கோடி ரூபாய்க்கான டிக்கெட் முன்பதிவு நடந்ததாக கூறப்படுகிறது. மேலும் இதுவரை ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு மட்டுமே 50 கோடி ரூபாயை கடந்து விட்டதாக கூறப்படுகிறது.
டிக்கெட் விலை ரூ. 500 முதல் ரூ. 2000 வரை விற்கப்படுவதாகவும் ரசிகர்களிடையே புகார் எழுந்துள்ளது. அதே போல் இடைத்தரகர்கள் சிலர் 5000 ரூபாய் வரை டிக்கெட்டுகளை பிளாக்கில் விற்பதாகவும் குற்றச்சாட்டு நிலவுகிறது. இந்த படம் எப்படியும் 1000 கோடி ரூபாய் வசூலித்த முதல் தமிழ் படம் என்ற சாதனையை படைக்கும் என்றும் தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் வெளியான லேட்டஸ்ட் தகவலின்படி, கூலி படத்தின் முதல் பாதியை ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் பார்த்திருக்கிறார். இடைவேளை வரை பாதி படத்தை பார்த்த அவர், பிரமித்து போயிருக்கிறார். இதுவரைக்கும் நீங்க எத்தனையோ படங்களில் நடிச்சிருக்கீங்க. நீங்க நடிச்ச படங்களில் இதுபோன்ற ஒரு கேரக்டரில் இதுவரை நடிச்சதே இல்லை என்று லதா ரஜினிகாந்த், ரஜினியிடமே வியந்து பாராட்டியதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.





