தமிழ் சினிமாவில் சில கோடி ரூபாய்களில் படம் எடுத்த காலம் எல்லாம் மலையறேி போய்விட்டது. ரூ. 3 கோடி முதல் ரூ. 5 கோடி வரை பட்ஜெட் இருந்தாலே ரசிகர்கள் விரும்பி ரசிக்கக்கூடிய படங்களை தரும் காலம் என்பது கோலிவுட்டில் பொற்காலமாக இருந்தது. கடந்த 1980 90களில் அப்படிதான் பல வெற்றிப் படங்கள் உருவாகின.
ஆனால் இப்போதெல்லாம் பான் இந்தியா படங்கள் என்ற பெயரில் ரூ. 300 கோடி முதல் ரூ. 600 கோடி வரை செலவு செய்து பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமான படங்கள் எடுக்கப்படுகின்றன. ஆனால் உண்மையில் இதில் படத்தை தயாரிக்க ஆகும் செலவு சில கோடிகள்தான். ஹீரோ ஹீரோயின் இசையமைப்பாளர் இயக்குனர் ஒளிப்பதிவாளர் ஸ்டண்ட் மாஸ்டர் என அவர்களது சம்பளமே 80 சதவீதம் மொத்த பட்ஜெட்டில் போய்விடுகிறது. மேக்கிங் செலவு என்பதே மிகவும் குறைவாக தான் இருக்கிறது.
முன்பெல்லாம் ஒரு படம் மாஸ் ஹிட் ஆகி விட்டால் ஹீரோக்களின் சம்பளம்தான் கணிசமாக உயரும். ஆனால் இப்போதெல்லாம் பல ஹீரோக்கள், படத்தின் வெற்றி தோல்வி பற்றி எல்லாம் கவலையே படாமல் அடுத்தடுத்த தங்களது படங்களில் சம்பளத்தை மிக கணிசமாக உயர்த்தி விடுகின்றனர். கடந்த ஓராண்டில் மட்டுமே நடிகர்களின் சம்பளம் 70 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது.
இந்நிலையில் ஹீரோக்கள் மட்டுமின்றி படத்தின் இயக்குனர்கள் இசையமைப்பாளர்களும் தங்களது சம்பளத்தை கோடிக்கணக்கில் உயர்த்தி வருகின்றனர். உதாரணமாக ஆரம்பத்தில் சில கோடிகள் மட்டுமே சம்பளம் வாங்கிய அனிருத், இப்போது ஒரு படத்துக்கு இசையமைக்க ரூ. 15 கோடி வாங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இப்போதைய லேட்டஸ்ட் தகவலின்படி கூலி படத்தை இயக்க டைரக்டர் லோகேஷ் கனகராஜ், சன்பிக்சர்ஸ் நிறுவனத்திடம் வாங்கிய சம்பளம் ரூ. 50 கோடி என்று சொல்லப்பட்டது. ஆனால் கூலி படம் எதிர்மறையான விமரசனங்களை சந்தித்த போதிலும் 4 நாட்களில் 404 கோடி ரூபாய் வசூலை அள்ளியிருக்கிறது.
தொடர்ந்து அடுத்து ரஜினி கமல் இணைந்து நடிக்கும் ஒரு புதிய படத்தையும் லோகேஷ் கனகராஜ் இயக்க தயாராகி உள்ளார். இதற்கிடையே லோகேஷ் கனகராஜ் சம்பளம் ரூ. 75 கோடியாக உயர்ந்துள்ளது. கைதி 2 படத்துக்கே லோகேஷ் கனகராஜ் சம்பளம் ரூ. 75 கோடி என பேசி முடிக்கப்பட்டதாக ஒரு லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. இது கோலிவுட் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.





