லோகேஷ் கனகராஜ் இந்திய சினிமாவின் முக்கிய இயக்குனராக தற்போது வலம் வருகிறார். இந்திய சினிமா நட்சத்திரங்கள் பலரும் லோகேஷ் கனகராஜ்ஜின் ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்ற விருப்பத்தில் இருப்பதாக கூறுகின்றனர். அந்தளவுக்கு இந்திய சினிமாவே திரும்பிப் பார்க்கும் இயக்குனராக லோகேஷ் கனகராஜ் திகழ்ந்து வருகிறார்.

லோகேஷ் கனகராஜ் இதற்கு முன்பு இயக்கிய “மாநகரம்”, “கைதி”, “மாஸ்டர்”, “விக்ரம்” ஆகிய திரைப்படங்களில் காதல் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்க மாட்டார். குறிப்பாக படத்தில் வரும் காதலர்கள் சேருவது போல் எந்த காட்சியும் இருக்காது.
உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால், “மாஸ்டர்” திரைப்படத்தில் சாந்தனு பாக்யராஜும் கௌரி கிசானும் காதலிப்பார்கள். ஆனால் சாந்தனு கதாபாத்திரம் இறந்துவிடுவது போல் காட்சிப்படுத்தியிருப்பார். அதே போல் “விக்ரம்” திரைப்படத்தில் பகத் பாசிலும் காயத்ரியும் காதலிப்பார்கள். அதில் காயத்ரி கதாபாத்திரத்தின் சோலியையும் முடித்துவிடுவார்.

இவ்வாறு அவரது திரைப்படங்களில் காதலர்கள் ஒன்று சேரவே மாட்டார்கள். இதனை கலாய்க்கும் விதமாக பல வீடியோ மீம்களே வந்திருக்கின்றன. இந்த நிலையில் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் ஒரு விழாவில் கலந்துகொண்டார்.
அப்போது அந்த விழாவை தொகுது வழங்கியவர், “உங்களது திரைப்படங்களில் காதலர்கள் ஏன் சேரவே மாட்டிக்கிறார்கள்?” என்று ஒரு கேள்வியை கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ், “அது சம்பந்தப்பட்ட வீடியோ மீம்ஸ்களை பார்த்தபோது நான் ஒரு சேடிஷ்ட்டோ என்று எனக்கே தோன்றுகிறது.
கதைக்கு அவ்வாறு தேவைப்பட்டதால்தான் அப்படி வைத்தேன். இனிமேல் காதலர்களை சேர்த்துவிடுவோம்” என்று கூறினார். இதன் மூலம் “லியோ” திரைப்படத்தில் விஜய்யும் திரிஷாவும் பிரிய வாய்ப்பில்லை என தெரிய வருகிறது.





