தமிழ் சினிமாவில் இப்போது யார் சூப்பர் ஸ்டார் என்று சர்ச்சை ஏற்படும் அளவுக்கு வசூல் ராஜாவாக உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக்கொண்டு இருப்பவர் நடிகர் விஜய். ஆனால் இனி சினிமாவில் என் பயணம் தொடராது, தளபதி 69 படத்துடன் நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு, தமிழக அரசியல் களத்தில் முழுத் தீவிரம் காட்ட விஜய் தயாராகி விட்டார்.
லியோ, தி கோட் படங்களை தொடர்ந்து நடிகர் விஜய் இப்போது தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். கடந்த 5ம் தேதி கேரளம் மாநிலம் பையனூரில் பாடல் காட்சி படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ள நிலையில், விஜய் இப்போது தனது தவெக கட்சியின் அரசியல் மாநாட்டில் கவனம் செலுத்தி வருகிறது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் வரும் 27ம் தேதி தவெக முதல் அரசியல் மாநாடு நடக்கிறது.
அந்த மாநாட்டில் விஜய் பங்கேற்ற பிறகு மீண்டும், தளபதி 69 படப்பிடிப்பில் கலந்துக்கொள்கிறார். எச் வினோத் இயக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, கவுதம் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன், பாபிதியோல் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். பெங்களூருவைச் சேர்ந்த கேவிஎன் புரடக்சன்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.
வெங்கட்பிரபு இயக்கத்தில் கடந்த மாதம் தி கோட் படம் வெளியானது. இந்த படத்தில் கிளைமேக்ஸில் நடிகர் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடித்திருந்தார். அந்த காட்சியில், விஜய் தன்னிடம் இருந்த துப்பாக்கியை சிவகார்த்திகேயன் கையில் கொடுத்துவிட்டுச் செல்வார். அதனால் விஜய் கையில் இருந்து சிவகார்த்திகேயன் துப்பாக்கியை வாங்கியதே, லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்கும் தகுதியை அவருக்கு தந்துவிட்டதாக, லோகேஷ் கனகராஜே கூறியிருப்பது இப்போது வைரலாகி வருகிறது.
நேற்று இரவு, சென்னையில் உள்ள சாய்ராம் கல்லூரியில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி, இயக்குனர்கள் மணிரத்னம், லோகேஷ் கனகராஜ், படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது மேடையில் பேசிய இயக்குனர் லோகேஷ் கனகரஜிடம், நிகழ்ச்சி தொகுப்பாளர், சிவகார்த்திகேயனை வைத்து எப்போது படம் டைரக்ட் செய்வீர்கள் என்று கேள்வி கேட்டார். அதற்கு அவர், நாங்கள் நீண்டகாலமாக பேசிக்கொண்டு இருக்கிறோம். விரைவில் நடக்கும். அதுதான் துப்பாக்கியை கையில் வாங்கிட்டார் இல்லே, என்று கூறியிருந்தார். அதாவது லோகேஷ் கனகராஜ் படம் என்றாலே துப்பாக்கி, கத்தி, ரத்தம் என வன்முறை களமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.





