தமிழ் சினிமாவில் அவ்வப்போது அத்தி பூத்தது போல மிக நல்ல நேர்த்தியான சிறந்த படங்கள் வெளிவருகின்றன. காக்கா முட்டை பண்ணையாரும் பத்மினியும் குட்நைட் சித்தா பார்க்கிங் லப்பர் பந்து குடும்பஸ்தன் டூரிஸ்ட் பேமிலி போன்ற சில படங்கள்தான் தமிழ் சினிமாவில் இன்னும் கலையம்சம் குறையவில்லை என்று நிரூபித்து வருகின்றன.
அந்த வகையில் கடந்தாண்டில் வெளியாகி மாபெரும் வரவேற்பை வெற்றியை பெற்ற படம்தான் லப்பர் பந்து. அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இந்த படத்தை டைரக்ட் செய்திருந்தார். ஹரீஷ் கல்யாண் படத்தின் நாயகனாகவும், முக்கியமான ஒரு கேரக்டரில் கெத்து தினேஷூம் நடித்திருந்தனர். சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி சுவாசிகா கீதா கைலாசம் தேவர்தர்ஷினி பால சரவணன் காளி வெங்கட் டிஎஸ்கே போன்றவர்களும் இந்த படத்தில் நடித்திருந்தனர்.
லோக்கல் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்தில் கதை வெகு யதார்த்தமானது. பெண்ணின் அப்பாவும் கிரிக்கெட் வீரர். அந்த பெண்ணை காதலிக்கும் ஹீரோவும் கிரிக்கெட் வீரர். ஒரு நாள் நடக்கும் கிரிக்கெட் போட்டியில் மருமகன் மாமனார் இருவரும் அடித்துக் கொள்கின்றனர். அதனால் கதாநாயகி குடும்பமே பிரிந்து போகிறது.
கடைசியில் கணவன் மனைவி ஒன்று சேர்கிறார்களா, மாமனார் மருமகன் ஒன்று சேர்கிறார்களா என்பதுதான் படத்தின் கதை. இதில் கிரிக்கெட் விளையாட்டின் வாயிலாக நிலவும் சாதிய பிரச்னைகளுக்கும் மறைமுகமாக தீர்வு சொல்லியிருப்பார் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து.
இந்த படத்தில் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை சுவாசிகா தான். பூமாலை கேரக்டரில் பெயிண்டராக நடித்த கெத்து தினேஷின் மனைவியாக சுவாசிகா யசோதை என்ற கேரக்டரில் நடித்திருப்பார். ஒரு பொறுப்புள்ள அதே நேரத்தில் கோபக்கார மனைவியாக அவரது நடிப்பு லப்பர் பந்து படத்தில் வேற லெவலில் இருந்தது. இந்த படத்தில் நடித்த பிறகு சுவாசிகா பல தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.
தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இந்த படம் விரைவில் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இந்த படத்தை சமீபத்தில் பார்த்து ஆச்சரியப்பட்ட பாலிவுட் நடிகர் ஷாருக்கான், லப்பர் பந்து படத்தை இந்தியில் ரீமேக் செய்து எடுக்க இருப்பதாக கூறியிருக்கிறார். மேலும் இந்த படத்தில் தனக்கு ஜோடியாக சுவாசிகா தான் நடிக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகை சுவாசிகா தான் இந்த தகவலை கூறியிருக்கிறார்.





