2010 – 11 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் திரையுலக பயணம் சரிவை சந்தித்தது. எந்த திரைப்பட வாய்ப்புகளும் இல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தார் வைகைப்புயல் வடிவேலு. இந்த சமயத்தில், அவர் முந்தைய காலத்தில் நடித்து பெரிதும் வெற்றி பெற்ற இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது.
இதனை இயக்குனர் சங்கரே தயாரித்தார். முந்தைய பாகத்தை எடுத்த சிம்பு தேவன் இதனை இயக்கினார். ஆனால் படப்பிடிப்பு சமயத்தில் நடிகர் வடிவேலுவின் தலையீடு அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் சிம்பு தேவன் பேச்சையும் அவர் கேட்கவில்லை என தெரிகிறது. இதனால் படத்தை விட்டு பாதியிலேயே வெளியேறினார் வடிவேலு. அவரை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார் சங்கர்.
இப்படி சர்ச்சைகளில் சிக்கிய வடிவேலு, தெனாலி எலி போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்த அது வந்த இடம் தெரியாமல் ஓடிப் போனது. இப்படியான நேரத்தில் தான் இயக்குனர் மாரி செல்வராஜ், வடிவேலுவுக்கு வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தை கொடுத்தார். தனது மாமன்னன் திரைப்படத்தில் மாமன்னனாகவே வரும் கேரக்டரை வடிவேலுவுக்கு கொடுத்து ரசிகர்களை வியந்து பார்க்க வைத்தார் மாரி செல்வராஜ்.
உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் இந்த திரைப்படம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியானது. நாற்காலி அரசியலை மையப்படுத்தி, சாதி ஏற்றத்தாழ்வுகளை உரக்க பேசிய இந்த திரைப்படம் வெற்றி பெற்றது. அதே சமயம் மாறி செல்வராஜின் முந்தைய திரைப்படங்களான பரியேறும் பெருமாள் கர்ணன் அளவுக்கு இந்த திரைப்படங்கள் இல்லை என்றும் விமர்சனங்கள் எழுந்தன.
படம் வெளியான நேரத்தில் இணையத்தில் அதிகமாக மாமன்னன் குறித்து பேசப்பட்டது. அது மட்டுமல்லாமல் பகத் பாஸில் தொடர்பான வீடியோக்களை இணையத்தில் பலர் வெளியிட்டு ஸ்டேட்டஸ் ஆக வைத்தனர். ஏற்கனவே பகத் பாசிலுக்கு தமிழ்நாட்டில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கும் சூழலில், இந்த திரைப்படத்தின் மூலம் அவர் அதிக ரசிகர்களை சம்பாதித்தார். வடிவேலுவை விட பகத் பாஸில் தான் அருமையாக நடித்திருப்பதாகவும் பலர் கூறினர்.
இந்த நிலையில் தற்போது, பகத் பாசில் மற்றும் வடிவேலு இணைந்து இன்னொரு படத்தில் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. டிராவலை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்படுகிறதாம். முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக உருவாகும் இதனை அறிமுக இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி இயக்குகிறார். சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர். பி சௌத்ரி இதனை தயாரிக்கிறார். இதற்கான அறிவிப்பு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.





