பரியேறும் பெருமாள் திரைப்படம் மூலம் அழுத்தமான கதையை தமிழ் சினிமாவில் பதிவு செய்து, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் இயக்குனர் மாரி செல்வராஜ். திருநெல்வேலியை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படத்தில், சாதி வெறியில் வேரூன்றி இருப்பவர்களையும், சாதிய ஒடுக்கு முறையால் அவமானப்பட்டு திண்டாடும் இளைஞரின் வாழ்க்கையையும் அழுத்தமாக காட்சிப்படுத்திருந்தார் இயக்குனர் மாரி செல்வராஜ். கதிர், ஆனந்தி, யோகி பாபு, மாரிமுத்து, லிங்கேஷ் உள்ளிட்ட கச்சிதமான கதாபாத்திரங்களால் உயிர் பெற்ற பரியேறும் பெருமாள், மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

நெல்லை வட்டார வழக்கு மொழியில் இயல்பு மீறாமல் எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தை, பலரும் திரையரங்குகளில் பார்த்து பாராட்டினர். இயக்குனர் பா ரஞ்சித்தின் தயாரிப்பில் உருவான இந்த திரைப்படம், தமிழ் சினிமாவை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்ற காவியம் என்று கூறலாம். முதல் படத்திலேயே தரமான வெற்றியை பதிவு செய்த இயக்குனர் மாரி செல்வராஜ், அடுத்ததாக எந்த மாதிரி படத்தை இயக்கப் போகிறார் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.
அதனை பூர்த்தி செய்யும் வகையில், தனுசுடன் இணைந்து கர்ணன் படத்தை எடுத்தார் மாரி செல்வராஜ். பேருந்து வசதி இல்லாமல் தவிக்கும் கிராம மக்களையும், அதற்குப் பின்னால் இருக்கும் அரசியலையும் தனக்கே உரிய பாணியில் விவரித்த இயக்குனர் மாரி செல்வராஜ், திரைப்படம் மூலம் பெரிதாக பேசப்பட்டார். அசுரன் திரைப்படத்திற்குப் பிறகு வெளியான இந்த திரைப்படம், தனுஷிற்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

இதையடுத்து கபடியை மையப்படுத்தி மாரி செல்வராஜ் திரைப்படம் எடுக்கப் போவதாகவும், இதில் துருவ் விக்ரம் நடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டதன் பேரில் அவருக்காக ஒரு கதையை உருவாக்கினார் மாரி செல்வராஜ். மாமன்னன் என தலைப்பிடப்பட்ட இந்த படத்தில், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்தனர். ஏ ஆர் ரகுமான் இசையமைக்க, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்தார்.
உதயநிதி ஸ்டாலினின் கடைசி படம் என அறிவிக்கப்பட்டதால், இந்த திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. கடந்த மாதம் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம், ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதிகார வர்க்கத்தை கேள்வி எழுப்பும் வகையில் படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு வசனங்களும், பலரையும் கவனிக்க வைத்தன. படத்தைப் பார்த்துவிட்டு ரஜினி, கமல்ஹாசன், தனுஷ் உள்ளிட்ட ஏராளமானோர் பாராட்டினர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படத்தைப் பார்த்துவிட்டு, இயக்குனர் மாரி செல்வராஜை பாராட்டினார். உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்த மாமன்னன், வசூலையும் அள்ளியது. 35 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான மாமன்னன் திரைப்படம், 60 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூல் செய்துள்ளது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்ட மாமன்னன் திரைப்படம் தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில், வரும் 27ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் மாமன்னன் வெளியாகிறது.





