செல்லமே திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் விஷால். அந்த திரைப்படம், நல்ல விமர்சனத்தை பெற்றாலும் விஷாலுக்கான படமாக அமையவில்லை. இப்படியான சூழலில் அவர் ஆக்சன் ஹீரோ என்பதை காட்டுவதற்காக, வெளிவந்த சண்டக்கோழி திமிரு ஆகிய இரண்டு திரைப்படங்களும் விஷாலின் கேரியரிலேயே மிக முக்கியமான திரைப்படங்களாக அமைந்தன.
இரண்டு திரைப்படங்களும் கொடுத்த வெற்றி அவரை, அடுத்தடுத்த உயரத்திற்கு எடுத்துச் சென்றது. தொடர்ந்து, இயக்குனர் ஹரி இயக்கத்தில் தாமிரபரணி படத்தில் நடித்தார் விஷால். பக்கா கமர்சியல் இயக்குனரான ஹரிக்கு, அந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை தேடி கொடுத்தது. அதுமட்டுமல்லாமல் விஷாலும் தாமிரபரணி திரைப்படத்தின் மூலம் முக்கிய நடிகர்கள் பட்டியலில் இணைந்தார்.
இதன் பிறகு, அவ்வபோது வெற்றி திரைப்படங்களை கொடுத்த விஷாலுக்கு, அடுத்த வெற்றியை கொடுத்தது ஹரியின் பூஜை திரைப்படம். இது முந்தைய திரைப்படமான தாமிரபரணி அளவுக்கு பிரமாண்ட வெற்றியை பெறவில்லை என்றாலும், கமர்சியல் திரைப்படத்திற்கான அத்தனை விஷயங்களும் உள்ளே இருந்ததால் படத்தை வரவேற்றனர் ரசிகர்கள். இப்படியாக விஷால் ஹரி இருவரும் இணைந்த இரண்டு திரைப்படங்களும் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியைப் பெற்றன.
இதன் பிறகு, விஷாலுக்கு வெற்றி என்பது எட்டாத கனியாகவே இருந்து வந்தது. இடையே பாண்டியநாடு, இரும்புத்திரை, துப்பறிவாளன் ஆகிய இரண்டு திரைப்படங்களும் அவரை, திரைத்துறையில் தொடர்வதற்கு உதவின. மருது திரைப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெறவில்லை என்றாலும், வசூல் ரீதியாக கவனத்தை ஈர்த்தது.
ஆனால் அதன் பிறகு விஷால் நடித்த எந்த திரைப்படங்களும் திரையரங்குகளில் ஓடவில்லை. கத்தி சண்டை, கதகளி, சண்டக்கோழி 2, அயோக்யா, ஆக்சன், சக்ரா, எனிமி, வீரமே வாகை சூடும், லத்தி என அவர் நடித்த எந்த திரைப்படங்களுமே ஓடவில்லை. அவ்வளவுதான் விஷாலின் கேரியர் முடிந்து விட்டது என்று பலரும் கூறிய நிலையில், மார்க் ஆண்டனி திரைப்படம் வந்து அவரை காப்பாற்றியது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த அந்த திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் ஈட்டியது.
இப்படியான சூழலில் தற்போது அவர் ஹரியுடன் மூன்றாவது முறையாக இணைந்து நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு ரத்தம் என பெயரிடப்பட்டுள்ளது. சூட்டிங் பணிகள் முடிவு பெற்றுள்ள நிலையில், போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இதை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் முதல் போஸ்டரில், விஷால் ஒருவர் தலையை துண்டாக கையில் வைத்திருப்பது போல் காட்சி இடம் பெற்று கிண்டலுக்கு உள்ளானது. இந்த நிலையில் தற்போது ரத்னம் திரைப்படம், கோடை விடுமுறைக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.





