நடிகர் சிவகார்த்திகேயன் முன்னணி நட்சத்திர நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார். கடந்தாண்டில் அவரது நடிப்பில் வெளியான அமரன் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று பிளாக்பஸ்டர் மூவியாக அமைந்தது. உலகம் முழுவதும் இந்த படம் மொத்தம் ரூ. 325 கோடி ரூபாய் என்ற அபாரமான வசூல் செய்தது. சிவகார்த்திகேயன் நடித்த படங்களில் அதிக வசூல் சாதனை படமும் இதுதான்.
அமரன் படத்துக்கு பிறகு நட்சத்திர நடிகராக முன்வரிசைக்கு வந்துவிட்ட நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக வெளிவந்த படம் மதராஸி. கடந்த 5ம் தேதி வெளியான இந்த படத்தை ஏஆர் முருகதாஸ் டைரக்ட் செய்திருந்தார். கன்னட நடிகை ருக்மணி வசந்த் நாயகியாக நடித்திருந்தார். துப்பாக்கி பட வில்லன் நடிகர் வித்யூத் ஜாம்வால் இந்த படத்திலும் வில்லனாக மிரட்டியிருந்தார்.
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இயக்குனர் ஏஆர் முருகதாஸ் பல வெற்றிப் படங்களை தந்தவர். குறிப்பாக தீனா கஜினி ரமணா துப்பாக்கி கத்தி என சூப்பர் ஹிட் படங்கள் அவரது இயக்கத்தில் வெளியானவை. ஆனால் கடைசியாக தமிழில் அவர் இயக்கிய தர்பார் இந்தியில் சிக்கந்தர் ஆகிய 2 படங்களும் படுதோல்வியை சந்தித்து விட்டன.
அதனால் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவான மதராஸி படத்துக்கு ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இல்லை. ஆன்லைன் டிக்கெட் முன்பதிவும் மிக மந்தமாகவே இருந்தது. படம் ரிலீஸ் நாளிலும் பல தியேட்டர்களில் ரசிகர்களின் கூட்டம் காண முடியவில்லை. படத்துக்கும் பெரிய அளவில் ஹைப் கிடைக்கவில்லை.
கஜினி ஏழாம் அறிவு துப்பாக்கி ஆகிய படங்களின் கலவைதான் மதராஸி என ரசிகர்கள் மத்தியில் விமர்சனம் எழுந்தது. சிவகார்த்திகேயன் சிறந்த நடிப்பை ஆக்சன் ஹீரோவாக தந்திருந்தாலும் கதையில் பெரிய சுவாரசியம் இல்லை என்றும் விமர்சனம் எழுந்தது. துப்பாக்கியை மையப்படுத்திய இந்த படத்துக்கு துப்பாக்கி 2 என்றே படத்துக்கு டைட்டில் வைத்திருக்கலாம் என்றும் கமெண்ட் எழுந்தது.
இதற்கு முந்தைய அமரன் படம் ரூ. 325 கோடி வசூலித்த நிலையில் மதராஸி படத்தின் வசூல் மிகவும் மந்தமாக இருந்து வருகிறது. கடந்த 5ம் தேதி படம் வெளியான நிலையில் இதுவரை 88 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது. 100 கோடி ரூபாயை கூட இதுவரை எட்டவில்லை. வரும் நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலித்து பாக்ஸ் ஆபீஸ் லிஸ்ட்டில் மதராஸி இடம் பிடிக்குமா என்பதே இப்போது பெரிய கேள்வியாக மாறியுள்ளது.





