எப்போதுமே ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த ஹீரோ தனது அடுத்த படத்தையும் அதே போன்ற ஒரு வெற்றிப்படமாக தர வேண்டும் என்றுதான் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அந்த வகையில் கடந்தாண்டில் வெளியான அமரன் படம் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது.
இதுவரை சிவகார்த்திகேயன் நடித்த படங்களில் மிக அதிக வசூலை பெற்று சாதனை படைத்த படம் அமரன்தான். ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில், இந்த படத்தை நடிகர் கமல்ஹாசனே சொந்தமாக தயாரித்திருந்தார். மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் பயோபிக்கில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார்.
இதில் கதாநாயகியாக சாய்பல்லவி நடிப்பு பெரிய அளவில் பாராட்டை பெறறது. சமீபத்தில் துபாயில் நடந்த சைமா விழாவில் அமரன் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய சாய்பல்லவிக்கு சிறந்த நடிகை விருது வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்துக்கு பிறகு சாய்பல்லவி சம்பளமும் ரூ. 3 கோடியில் இருந்து ரூ. 8 கோடி உயர்த்தப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் கடந்த 5ம் தேதி ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி படம் ரிலீஸானது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்து இருந்தார். ஆனால் பாடல்கள் எதுவும் பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை. கன்னட நடிகை ருக்மணி வசந்த் கதாநாயகியாகவும் வில்லன் கேரக்டரில் வித்யூத் ஜாம்வாலும் நடித்திருந்தனர்.
இந்த படம் வெளியாகி 7 நாட்கள் ஆன நிலையில் இதுவரை 80 கோடி ரூபாய் வரை மதராஸி படத்தின் வசூல் கடந்திருப்பதாக கூறப்படுகிறது. இன்னும் சில தினங்களில் 100 கோடி ரூபாய் வசூலித்து பாக்ஸ் ஆபீஸ் ஹிட் லிஸ்ட்டில் மதராஸி படமும் இணைந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் அமரன் போல மதராஸி பெரிய வெற்றியை பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏனெனில் அமரன் படம் மொத்தம் ரூ. 325 கோடி வசூலித்து சாதனை படைத்தது. கடந்தாண்டில் வெளியான படங்களில் ரூ. 445 கோடி வசூலித்த தி கோட் படம் வசூலில் முதலிடம் பிடித்தது. ரூ. 265 கோடி வசூலித்த வேட்டையன் 3ம் இடம் பிடித்தது. அமரன்தான் அதிக வசூலில் 2ம் இடம் பிடித்தது. ஆனால் இந்த முறை 100 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபீஸ் லிஸ்ட்டில் இடம்பிடிப்பதே மதராஸி படத்துக்கு பெரிய போராட்டமாக உள்ளது. அமரன் படத்துடன் ஒப்பிடும்போது மதராஸி வசூலில் ரசிகர்களின் வரவேற்பில் சுமாரான படம்தான் என்று கூறப்படுகிறது.





