தனது உடல் மொழியாலும், ஆக்ரோஷமான நடிப்பினாலும் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்தவர் டேனியல் பாலாஜி. டேனியல் பாலாஜி ஒரு படத்தில் நடித்திருந்தால் நிச்சயம் அது தரமாக இருக்கும் என்று ரசிகர்கள் நினைக்கும் அளவிற்கு குறைவான படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவர்.
இயக்குனர்கள் கௌதம் மேனன், வெற்றிமாறன் ஆகியோரின் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தவர். ஆரம்பத்தில் சின்னத்திரை சீரியல்களில் அவர் நடித்து வந்தார். குறிப்பாக தமிழ்நாட்டின் இல்லம்தோறும் கொண்டாடப்பட்ட சித்தி சீரியலில் டேனியல் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார்.
அதன் காரணமாகவே அவர் பெயர் டேனியல் பாலாஜி என்று மாறியது. தொடர்ந்து அலைகள் சீரியலிலும் அவர் வந்தார். பிறகு வெள்ளித்திரையில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவருக்கு, காக்க காக்க படத்தில் போலீஸ் அதிகாரி கெட்டப் கொடுத்திருந்தார் கௌதம் மேனன்.
அதில் சூர்யாவின் நண்பராக ஸ்ரீகாந்த் என்னும் கதாபாத்திரத்தில் கவனத்தை ஈர்த்தார் டேனியல் பாலாஜி. இதனைத் தொடர்ந்து அவர் திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் வேட்டையாடு விளையாடு. அமுதனாக நடித்து மிரளச் செய்த அவருக்கு நாலாபுறமும் ரசிகர்கள் கூடினர். தொடர்ந்து பொல்லாதவன் திரைப்படத்தில், ரவி கதாபாத்திரத்தில் கவனத்தை ஈர்த்தார் டேனியல் பாலாஜி.
வடசென்னை, பைரவா வை, ராஜா வை உள்ளிட்ட திரைப்படங்களிலும் அவர் நடித்திருக்கிறார். இதுபோக மலையாளம் தெலுங்கு திரைப்படங்களிலும் அவர் பங்களித்துள்ளார். நடிகர் முரளியின், ஒன்றுவிட்ட சகோதரர் அவர். 48 வயதான டேனியல் பாலாஜிக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
உடனடியாக கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் டேனியல் பாலாஜி சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிர் இழந்தார். டேனியல் பாலாஜியின் மரணம் திரையுலகினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். டேனியல் பாலாஜி கண் தானம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.





