தமிழ் சினிமா ரசிகர்கள் தற்போது முழுக்க முழுக்க எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் விடா முயற்சி. 2023 ஆம் ஆண்டு மே ஒன்றாம் தேதி இந்த திரைப்படத்திற்கான அறிவிப்பு வெளியானது. பிறகு அதே ஆண்டின் அக்டோபர் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கப்பட, கிட்டத்தட்ட ஓராண்டாக இதன் பணிகள் நடைபெற்று முடிந்திருக்கின்றன.
அஜித் குமாருடன் திரிஷா அர்ஜுன் ரெஜினா உள்ளிட்டோர் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள். தி பிரேக் டவுன் என்னும் ஹாலிவுட் திரைப்படத்தின் தழுவலாக இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. காணாமல் போன மனைவியை கண்டுபிடிக்கும் கணவனின் கதை தான் இது என்று கூறப்படுகிறது.
இந்த திரைப்படத்தில் அஜித் குமாருக்கு மனைவியாக நடித்திருக்கிறார் திரிஷா. அர்ஜுன் ரெஜினா ஆரவ் உள்ளிட்டோர் எதிர்மறைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார். இதிலிருந்து வெளியான இரண்டு பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாவதாக தான் இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அதற்கான பணிகளில் சுணக்கம் ஏற்பட்டதால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. தற்போது பிப்ரவரி ஆறாம் தேதி படம் வெளியாவதாக தெரிவித்திருக்கிறார்கள். இதனால் உற்சாகமடைந்திருக்கும் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.
இப்படியான சூழலில் தான் விடாமுயற்சி குறித்த பல்வேறு தகவல்களை கொடுத்திருக்கிறார் இயக்குனர் மகிழ்திருமேனி. அவர் பேசியிருப்பதாவது, அஜித் சார் உடன் பணியாற்ற வேண்டும் என்பது எனது 15 ஆண்டு கனவு. ஒரு நாள் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திராவிடமிருந்து எனக்கு செல்பேசியின் மூலம் அழைப்பு வந்தது. அப்போது அஜித்குமாரின் 62 ஆவது படத்தை நீங்கள் தான் இயக்கப் போகிறீர்கள் உடனடியாக படத்தை தொடங்க வேண்டும் என்று கூறினார்கள். நான் ஆச்சரியம் அடைந்தேன்.
விடாமுயற்சி என்னுடைய கதை அல்ல. இதில் நான் திரைக்கதைக்காக தான் பணிபுரிந்து இருக்கிறேன். முதல் முறையாக நான் ஒரு கதையைப் பார்த்து ஆர்வம் அடைந்துள்ளேன். விடாமுயற்சி திரைப்படம் குறித்து உள்நோக்கத்துடன் எதிர்மறையான கருத்துக்கள் பரப்பப்படுவதை நானும் அஜித் சாரும் பார்த்துக் கொண்டுதான் இருந்தோம். எங்களுக்கு உண்மை தெரியும் என்பதால் நாங்கள் அதை தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை. பெண்களை நாம் தவறாக காட்டக்கூடாது என்பதில் அஜித் சார் உறுதியாக இருந்தார். மேலும் பெண்களின் பார்வையில் இருந்தும் சிலவற்றை அவர் கூற விரும்பினார். அப்படி ஒரு படமாக தான் விடாமுயற்சி இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.





