தர்பார், அண்ணாத்த ஆகிய இரண்டு படங்களுமே ரஜினிகாந்த்துக்கு வரிசையாக தோல்வியை கொடுத்தன. இதனால் அவர் எப்படியாவது ஒரு வெற்றி கொடுத்துவிட வேண்டுமென்பதில் தீர்க்கமாக இருந்தார். அதன்படி நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்தார். அந்தப் படம் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மெகா ஹிட்டானது. உலகளவில் 700 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாகவும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
அந்த வெற்றி கொடுத்த உற்சாகத்தோடு தற்போது அவர் ஞானவேல் இயக்கத்தில் தன்னுடைய 170ஆவது படத்தில் நடித்துவருகிறார். ஜெய்பீம் படத்தின் மூலம் ஞானவேல் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்தவர் என்பதால் ரஜினியை வைத்து அவர் என்ன மாதிரியான சம்பவத்தை செய்யப்போகிறார் என்பதை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
இப்படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், துஷாரா விஜயன், ரித்திகா சிங், ராணா டகுபதி உள்ளிட்டோர் கமிட்டாகியிருக்கின்றனர். கேரளாவில் தொடங்கிய ஷூட்டிங் கன்னியாகுமரி, மும்பை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. ஃபகத் பாசில் இதில் வில்லனாக நடிக்கிறார். அவரும் நேற்றிலிருந்து தலைவர் 170 படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறார்.
தலைவர் 170 மீது ரசிகர்களுக்கு எப்படி பெரும் ஆர்வம் இருக்கிறதோ அதேபோல் ரஜினியின் 171ஆவது படத்தின் மீதும் அதீத எதிர்பார்ப்பு இருக்கிறது. அதற்கு காரணம் அந்தப் படத்தை இயக்கப்போவது தற்போது கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் இயக்குநராக இருக்கும் லோகேஷ் கனகராஜ். சன் பிக்சர்ஸ் நிறுவனம் அந்தப் படத்தை தயாரிக்கிறது. கமல் ஹாசனுக்கு விக்ரம் படம் மூலம் எப்படி பிரமாண்ட வெற்றியை லோகேஷ் கொடுத்தாரோ அதேபோல் ரஜினிக்கும் கொடுக்க வேண்டும் என்பதே தலைவர் ரசிகர்களின் ஆறாத ஆவல்.
அடுத்த வருடம் ஏப்ரலிலிருந்து ஷூட்டிங் தொடங்கவிருக்கிறது. லோகேஷும் படத்துக்கான கதை எழுதும் பணியில் தீவிரமாக கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். இதற்கிடையே தலைவர் 171 படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் பரவியது. ஏற்கனவே தளபதியில் ரஜினி – மம்மூட்டி காம்போ ஹிட்டடித்ததால் இதில் நடித்தாலும் செமயாக இருக்கும் ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்ய ஆரம்பித்தனர்.
இந்நிலையில் தலைவர் 171 படத்தில் தான் நடிப்பதாக வந்த தகவல் குறித்து மம்மூட்டி விளக்கம் அளித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், “ரஜினிகாந்த்தின் தலைவர் 171 படத்துக்காக என்னை யாரும் அப்ரோச் செய்யவில்லை. ஆனால் அந்தப் படத்தில் நடிக்க வேண்டுமென்றால் நான் எப்போது வேண்டுமானாலும் தயாராக இருப்பேன்” என கூறியிருக்கிறார்.





