தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமானவர் சூரி. வெண்ணிலா கபடிக்குழு படத்தில் பரோட்டா காமெடி காட்சியில் நடித்து பல படங்களில் பரோட்டா சூரி என்றே அவர் டைட்டில் கார்டுகளில் குறிப்பிடப்பட்டார். பல முன்னணி நட்சத்திர ஹீரோக்களுடன் பல படங்களில் காமெடி ரோலில் நடித்தார்.
இந்த நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் சூரியை ஹீரோவாக விடுதலை படத்தில் அறிமுகப்படுத்தினார். அந்த படத்தின் அபார வெற்றிக்கு பிறகு கருடன் விடுதலை 2 கொட்டுக்காளி மாமன் உள்ளிட்ட படங்களில் நடித்து ஒரு நல்ல ஹீரோவாக ரசிகர்களிடம் சூரி பெயர் பெற்றிருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் நடிகர் சூரி இயக்குனர், வெற்றிமாறனின் உதவி இயக்குனர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் அவரது முதல் படமான மண்டாடி என்ற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இந்த படத்தில் மஹிமா நம்பியார் கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும் நடிகர் சத்யராஜ் முக்கியமான ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார்.
இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதி உள்ள கடல் மற்றும் கடற்கரை பகுதிகளில் பெரும்பாலான காட்சிகள் படம்பிடிக்கப்பட்டு உள்ளன. பல மாதங்களாக அங்கு தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வரும் செப்டம்பரில் வெளியாக உள்ள நிலையில் மண்டாடி படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கிறது. வருகிற ஆகஸ்ட் 21ம் தேதி மதுரையில் இந்த விழா நடைபெற உள்ளது.
மதுரையில் உள்ள கல்லூரி ஒன்றில் திறந்தவெளி மைதானத்தில் நடக்கும் மண்டாடி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், ரசிகர்கள் கலந்து கொள்ளும் விதமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஏனென்றால் மண்டாடி படப்பிடிப்பு தொண்டி பகுதியில் நடந்த போது அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களும் மீனவர்களும் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பலரும் இந்த படத்தின் படப்பிடிப்புக்கு பெரிய அளவில் ஒத்துழைத்து படம் உருவாக்க உதவி செய்தனர்.
அந்த வகையில் அவர்களை கௌரவிக்கும் விதமாக மதுரையில் இந்த விழாவை நடத்துகின்றனர். மேலும் இந்த விழாவில் கலந்துகொள்ள வசதியாக பஸ் மற்றும் வேன் போன்ற வாகனங்களை ஏற்பாடு செய்து இந்த விழாவுக்கு ராமநாதபுரம் மாவட்ட மக்களை அழைத்து வரவும் படக்குழுவினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். தங்கள் படப்பிடிப்புக்கு ஒத்துழைத்த மக்களுக்கு மரியாதை செய்யும் விதமாக நன்றி மறக்காமல் மண்டாடி படக் குழுவினர் இப்படி ஒரு ஏற்பாட்டை செய்திருப்பது பாராட்டை பெற்றுள்ளது.





