நடிகர் ரஜினிகாந்த் கடந்த 45 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் மிக முக்கிய இடத்தில், தமிழ் சினிமாவின் அடையாளமாக இருப்பவர். ரஜினிகாந்த் என்ற பெயர், சினிமா ரசிகர்களின் மந்திரச் சொல்லாக இப்போதும் இருக்கிறது. 73 வயதிலும், அவர் நடித்த ஜெயிலர் படம் 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலிக்கிறது. இப்போது வேட்டையன் ரஜினி விரைவில் திரைக்கு வருகிறார்.
ரஜினிகாந்தை பொருத்த வரை ஆரம்பத்தில் துணை நடிகராக நடித்த காலகட்டத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில், இயக்குனர் முன் எப்படி நடந்துக்கொண்டாரோ, இப்போதும் அவர் அதே பணிவுடன், பவ்யத்துடன் அதே தொழில் பக்தியுடன் இருப்பதை பார்த்து பலரும் மிரண்டு போயுள்ளனர். ஒரு புதுமுக நடிகர் போல தான் டைரக்டர் சொல்லித் தருவதை அவர் கேட்டுக்கொள்வது வழக்கம்.
ஜெயிலர் படத்தில் நடித்த போது, இயக்குனர் என்ற மரியாதையில் நெல்சனை பார்த்தால் எழுந்து நிற்பதும், ரெஸ்ட் ரூம் செல்ல கேரவன் செல்வதாக இருந்தாலும் டைரக்டரிடம் தகவல் சொல்லிவிட்டு செல்வதும் என அவரது நடவடிக்கைகளை, ஜெயிலர் பட விழாவில் மேடையிலேயே ஸ்டேட்மென்ட் போல சொல்லி பிரமிப்பை ஏற்படுத்தினார் டைரக்டர் நெல்சன் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் ரஜினிகாந்த் இதுவரை 169 படங்களில் நடித்து முடித்துவிட்டார். இப்போது தசெ ஞானவேல் இயக்கும் 170வது படம் வேட்டையன். அதன்பிறகு நடிக்க இருப்பது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 171வது படம். இத்தனை படங்களில் நடித்தும் இதுவரை ஒருமுறை கூட ரஜினிகாந்த் படங்களில் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் சந்திக்காத பிரச்னை கால்ஷீட் தான். ரஜினி படம் என்றால் கால்ஷீட் மிக துல்லியமாக இருக்கும். எந்த குளறுபடியும் வராது.
இதுகுறித்து ஒரு நேர்காணலில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான, ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பாளர் சரவணன் கூறியதாவது, எப்போது தங்களது கால்ஷீட் விவரங்களை கவனித்துக்கொள்ள நடிகர் நடிகையர் உதவியாளர் வைத்திருப்பர். ஏதேனும் கால்ஷீட் பிரச்னை ஏற்பட்டால், உதவியாளர் மீது பழியை போட்டு தப்பித்து விடுவர். ஆனால் ரஜினிகாந்த் அப்படியல்ல.
அவரது கால்ஷீட் விவரங்களை அவரே தான் கவனித்துக்கொள்வார். ஒரு படத்துக்கு தேதி ஒதுக்கி விட்டால், அதற்கான கால்ஷீட் விவரங்களை ரஜினியே கைபட எழுதி தயாரிப்பாளர் அல்லது இயக்குனரிடம் தந்துவிடுவார். அந்த தேதிகளில் எந்த மாற்றமும் படம் முடியும் வரை இருக்காது. ஒரு வேளை மற்ற படங்களில் ரஜினி நடிக்க ஏதும் ஓரிரு நாட்கள் யாராவது கேட்டால், படத்தின் இயக்குனர், தயாரிப்பாளரிடம் கேட்டுக்கொள்ளுங்கள் என்று கூறிவிடுவதுதான் ரஜினியின் வழக்கம். இதுவும் ரஜினியின் வெற்றிக்கு முக்கிய காரணம், என்று ஏவிஎம் சரவணன் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





