செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வசூல் மழை குவித்து வருகிறது விஜயின் கோட் திரைப்படம். தந்தை மகனுக்கு இடையேயான மோதலை தன்னால் முடிந்த அளவு சுவாரசியப்படுத்தி அதில் வெற்றியும் கண்டிருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு.
படத்தில் வெறும் மோதல் கதையை மட்டும் வைக்காமல், ஆங்காங்கே சில கதாபாத்திரங்களையும் அழைத்து வந்து விறுவிறுப்பை அவர் கூட்டி இருந்தார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் சிவகார்த்திகேயன் வந்தபோது, அரங்கம் அதிர்ந்தது.
அதிலும் விஜய் சிவகார்த்திகேயனுக்கு இடையேயான உரையாடல், விஜயின் அரசியல் பயணத்தை மறைமுகமாக குறிக்க, எழுந்து நின்று ரசிகர்கள் விசில் அடித்தார்கள். அதேபோல், தல என்ற வார்த்தையை பயன்படுத்தி மங்காத்தா இசை பயன்படுத்தப்பட்ட விதமும் திரையரங்கில் அலப்பறையை கூட்டியது.
இதில் மிகவும் கவனிக்கத்தக்க வைத்தது திரிஷாவின் என்ட்ரி. மட்ட பாடலுக்கு அவர் மஞ்சள் சேலை உடுத்திவிட்டு குத்தாட்டம் போட, ட்ரெண்டானது. ஆனால் அந்த ஒரு பாடலுக்கு மட்டும் தான் யுவன் சங்கர் ராஜா கவனம் செலுத்தினாரா என்ற கேள்வியும் எழுகிறது. முக்கியமான காட்சிகளில் தனது பிஜிஎம்மில் கவனத்தை செலுத்த யுவன் சங்கர் ராஜா தவறிவிட்டார் என்று தான் கூற வேண்டும்.
படம் வெளியாகி ஒரு வாரத்தை நெருங்கும் நிலையில், அதன் வசூல் கிட்டத்தட்ட 300 கோடி ரூபாயை கடந்திருக்கிறது. வெறும் நான்கு நாட்களில் கோட் திரைப்படம் 288 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக, அதன் தயாரிப்பு நிறுவனம் ஏஜிஎஸ் அதிகாரபூர்வமாக அறிவித்தது.
படத்தின் முதல் காட்சியில் விஜயகாந்த் வேடத்தில் விஜய் தோன்றுவார். அப்போது அவர் விஜயகாந்த் வாய்ஸிலும் தான் பேசுவார். ஏ ஐ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட இந்தக் காட்சி மாஸாக அமைந்த நிலையில், அதன் பின்னணி குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது அந்தக் காட்சியில் விஜயகாந்த் குரலில் பேசியது நடிகர் மணிகண்டன் தானாம். மறைந்த நடிகருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவர் ஊதியம் பெறவில்லை என்றும் கூறப்படுகிறது. கோட் படத்தில் இருந்து வெளியாகி இருக்கும் இந்த புதிய தகவல் விஜய் ரசிகர்களை மட்டுமல்லாமல் பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.





