இன்றைய தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பவர் மணிகண்டன். ஆரம்பத்தில் குறும்படங்களில் நடித்து வந்த அவரை, காதலும் கடந்து போகும் திரைப்படம் தான் வெள்ளித்திரையில் அறிமுகப்படுத்தியது. அதில் முரளி எனும் கதாபாத்திரத்தில் வந்திருப்பார் மணிகண்டன். பிறகு அங்கிருந்து விக்ரம் வேதா திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு வந்தது.
அந்த திரைப்படத்தின் வசனங்கள் எல்லாம் மிகவும் கூர்மையாக இருக்கும். சொல்லப்போனால் அந்த திரைப்படத்தின் வெற்றிக்கு வசனமும் ஒரு காரணம் என்று கூறலாம். இதனை எழுதியவர் வேறு யாருமல்ல மணிகண்டன் தான். படத்தில் நடிக்கவும் செய்து டயலாக்கும் எழுதி பலரையும் ஆச்சரியப்படுத்தினார்.
பிறகு காலா உள்ளிட்ட குறிப்பிட்ட தக்க திரைப்படங்களில் மணிகண்டனை பார்க்க முடிந்தது. இப்படியான சூழலில் தான் ஜெய்பீம் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது. ராஜாக்கண்ணு என்னும் கதாபாத்திரத்தில், இருளர் சமூக இளைஞராகவே வாழ்ந்திருப்பார் மணிகண்டன்.
அதில் சில காட்சிகளில் வந்து போனாலும் அவரது நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இதன் நடுவே சில்லு கருப்பட்டி திரைப்படமும் அவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தது. பிறகு கதாநாயகனாக உருவெடுத்த மணிகண்டன் கதைகளை தேர்வு செய்வதில் மிகவும் கவனமாக இருக்கிறார். அவர் ஹீரோவாக அறிமுகமான, குட் நைட் திரைப்படம் நல்ல ரீச் ஆனது.
சொல்லப்போனால் குட் நைட் திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக அமைந்தது. இதன் பிறகு லவ்வர் படத்தில் மணிகண்டன் நடித்து 2கே கிட்ஸ்களுக்கு பரிச்சயமானார். அந்த திரைப்படத்தை அவர்கள் தான் பெரிதும் கொண்டாடினார்கள். இப்படியான சூழலில் மீண்டும் குடும்ப ஆடியன்ஸை மையப்படுத்தி ஒரு படத்தை எடுக்க களத்தில் இறங்கி இருக்கிறார் மணிகண்டன்.
குடும்பஸ்தன் என டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தை, ராஜேஷ்வர் காளிசாமி இயக்கியுள்ளார். சாதாரண குடும்பத்தை சேர்ந்த ஒரு இளைஞன், அன்றாடம் தனது குடும்பத்தை நடத்துவதில் எந்த அளவு சிக்கலை எதிர்கொள்கிறான் என்பதை மையப்படுத்தியே இந்த கதை எழுதப்பட்டிருக்கிறது. கோவை பின்னணியில் இதனை படமாக்கி இருக்கிறார்கள். இதன் சூட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த நிலையில், குடும்பஸ்தன் திரைப்படம் குடியரசு தின விடுமுறையை கணக்கில் கொண்டு, வரும் 24ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.





