இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா நேற்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 48 ஆன நிலையில் சில தினங்களுக்கு முன் இருதய அறுவை சிகிச்சை நடந்துள்ளது. டாக்டர்கள் அறிவுரைப்படி சேத்துப்பட்டில் உள்ள தனது வீட்டில் ஓய்வில் இருந்த அவர் திடீரென நேற்று காலமானார்.
இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் தாஜ்மகால் என்ற படத்தில் நடிகராக கடந்த 1999ம் ஆண்டில் மனோஜ் குமார் அறிமுகமானார். பிறகு தமிழில் பல படங்களில் நடித்தார். அன்னக்கொடி பல்லவன் சமுத்திரம் ஈரநிலம் விருமன் என பல படங்களில் நடித்தார். ஆனால் நடிப்பில் பெரிய அளவில் அவரால் சாதிக்க முடியவில்லை.
நடிகர் மனோஜ் பாரதிராஜாவுக்கு நந்தனா என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். நந்தனாவும் திரைப்பட நடிகைதான். ஆனால் மனோஜை காதலித்து திருமணம் செய்த பிறகு அவர் படங்களில் நடிக்கவில்லை. பல படங்களில் நடித்தும் பெரிய அளவில் நடிகர் மனோஜ் வரவேற்பு பெறாததால் கடைசியாக மார்கழி திங்கள் என்ற படத்தை அவரே டைரக்ட் செய்தார். இந்நிலையில் அந்த படமும் சரியாக போகவில்லை.
சென்னை நீலாங்கரையில் வைக்கப்பட்டு நடிகர் மனோஜ் பாரதிராஜா உடலுக்கு தமிழ் சினிமாவை சேர்ந்த நடிகர்கள் நடிகைகள் இயக்குனர்கள் தொடர்ந்து நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர்கள் விஜய் சூர்யா சரத்குமார் கார்த்தி பிரபு இளவரசு கவிஞர் வைரமுத்து இயக்குனர்கள் ஆர்கே செல்வமணி லிங்குசாமி மாரி செல்வராஜ் மணிரத்னம் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.
இளையராஜா கமல்ஹாசன் உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் தங்களது வலைதள பக்கத்தில் பாரதிராஜா மகன் மனோஜ் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். இன்று மாலை பெசன்ட் நகரில் உள்ள மயானத்தில் மனோஜ் பாரதிராஜாவின் உடல் தகனம் செய்யப்படுகிறது. மகனின் மறைவால் சோகத்தில் ஆழ்ந்துள்ள பாரதிராஜாவுக்கு பலரும் ஆறுதல் சொல்லி வருகின்றனர்.
தனது தந்தை பாரதிராஜா இயக்கத்தில் கமல் ஸ்ரீதேவி நடித்த படம் சிகப்பு ரோஜாக்கள் படத்தின் 2ம் பாகத்தை இயக்க வேண்டும் என்ற ஆசை மறைந்த நடிகர் மனோஜ் பாரதிராஜாவுக்கு நீண்ட நாட்களாக இருந்தது. சிம்பு ஸ்ருதிஹாசன் நடிப்பில் இந்த படத்தை உருவாக்க அவர் மிகவும் ஆசைப்பட்டு அதற்கான முயற்சிகளை பல ஆண்டுகளாக எடுத்து வந்தார். ஆனால் அந்த ஆசை கடைசி வரை அவருக்கு நிறைவேறாமலேயே போய்விட்டது.





