லியோ படத்தில் நடித்திருந்த மன்சூர் அலிகான் சில வாரங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசியபோது, “லியோ படத்தில் த்ரிஷாவை ரேப் செய்யும் சீன் இருக்கும் என்று நினைத்தேன். குஷ்பூ, ரோஜாவை எப்படி கட்டிலில் தூக்கி போட்டேனோ அதேபோல் த்ரிஷாவையும் தூக்கி போடலாம் என்று நினைத்தேன். ஆனால் அது நடக்கவில்லை” என கூறியிருந்தார். அவரது இந்தப் பேச்சு தமிழ் திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
அவரது பேச்சை பார்த்த த்ரிஷாவோ மன்சூர் அலிகான் மனித குலத்துக்கே இழுக்கு. இனி அவருடன் எப்போதும் இணைந்து நடிக்கமாட்டேன். அவரது பேச்சு பெண்களை வெறுக்கும் வகையில் இருக்கிறது என காட்டமாக பதிலடி கொடுத்திருந்தார். அவர் மட்டுமின்றி குஷ்பூ, மடோனா, லோகேஷ் கனகராஜ், எம்.எஸ்.பாஸ்கர், கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்டோரும் கண்டித்திருக்கின்றனர்.
முக்கியமாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியும் தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார். ஆனால் கோலிவுட்டில் இருக்கும் பெரிய ஹீரோக்கள் யாருமே இதுகுறித்து வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் மன்சூர் அலிகான் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் வழக்கம் போல் அலட்சியமாகவே நடந்துகொண்டாஅர்.
அந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய மன்சூர் அலிகான், “என்னிடம் விளக்கம் கேட்காமலேயே நடிகர் சங்கம் கண்டன அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. என்னை பலிகடா ஆக்கி அவர்கள் நல்ல பெயர் எடுக்க முயற்சிக்கிறார்கள். சங்கத்தில் இருப்பவர்கள் எல்லாம் என்ன யோக்கிய சிகாமணிகளா. அறிவுகெட்ட கூமுட்டைகள். சினிமாவில் ரேப் சீன் என்றால் என்ன. உண்மையாகவே ரேப் செய்கிறோமா.
நான் கதாபாத்திரமாக அப்படி பேசினேன். த்ரிஷா நல்ல நடிகை. அவர் கோபப்பட்டு பேசியிருக்கிறார். அவருடன் இணைந்து மீண்டும் நடிப்பேன். எனக்கு எதிராக நடிகர் சங்கம் வெளியிட்ட கண்டன அறிக்கையை 4 மணி நேரத்துக்குள் திரும்பப் பெற வேண்டும். நான் எதிர்த்து நின்றால் எல்லோரும் தலை தெறிக்க ஓடிவிடுவார்கள் அவ்வளவுதான்.
இந்த பூச்சாண்டிகளுக்கு எல்லாம் நான் பயப்படமாட்டேன். தமிழ்நாடே என் பக்கம்தான் இருக்கு. சிலர் வேண்டுமென்றே இந்தப் பிரச்னையில் கொம்பு சீவிவிடுகிறார்கள்” என்றார். அவரது இந்தப் பேட்டியும் திரையுலகில் தற்போது பேசு பொருளாகியிருக்கிறது. மேலும் இதுவரை அவர் வருத்தமோ மன்னிப்போ கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





