தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. நடப்பாண்டில் இதுவரை தமிழில் 120க்கும் மேற்பட்ட படங்கள் கடந்த 4 மாதங்களில் வெளிவந்துவிட்டன. சில வாரங்கள் இல்லாவிட்டாலும் வழக்கமாக வியாழன் அல்லது வெளிக்கிழமைகளில் புதிய படங்கள் ரிலீஸ் ஆகின்றன. அதனால் புதுப்புது படங்களை ரசிகர்கள் தொடர்ந்து ரசித்து வருகின்றனர்.
எனினும் கடந்த நான்கரை மாதங்களில் இதுவரை ரஜினி கமல் விஜய் சிம்பு தனுஷ் போன்றவர்களின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. அதே நேரத்தில் மணிகண்டன் நடித்த குடும்பஸ்தன் சுந்தர் சி இயக்கிய மதகஜ ராஜா பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் அஜீத்குமார் நடித்த குட் பேட் அக்லி போன்ற படங்கள் பெரிய வரவேற்பை பெற்றிருக்கின்றன.
இதில் அஜீத்குமார் நடித்த விடாமுயற்சி படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாத போதிலும் குட் பேட் அக்லி பெரிய அளவில் பிளாக்பஸ்டர் வெற்றியை தந்திருக்கிறது. இந்த படம் கடந்த 10ம் தேதி வெளியான நிலையில் உலகளவில் ரூ. 200 கோடி வசூலையும், தமிழ்நாட்டில் மட்டும் 114 கோடி ரூபாய் வசூலையும் குவித்திருக்கிறது.
அதே நேரத்தில் கடந்த சில ஆண்டுகளாக 15 ஆண்டுகள் முதல் 30 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த பல சூப்பர் ஹிட் படங்கள் மீண்டும் ரி ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. புதிய டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ஒலி ஒளி அமைப்புடன் நவீன தரத்தில் உருவாக்கப்பட்டு வெளியாகும் அந்த படங்களை காண ரசிகர்கள் பலத்த ஆர்வம் காட்டுகின்றனர். கடந்தாண்டில் விஜய் திரிஷா நடித்த கில்லி ரி ரிலீஸாகி பெரிய அளவில் வசூலை வாரி குவித்தது.
அதே போல் நடிகர் ரஜினிகாந்த் நடித்த முத்து பாட்ஷா கமல் நடித்த நாயகன் ஆளவந்தான் குணா விஜய் நடித்த கில்லி போக்கிரி ஆர்யா சந்தானம் நடித்த பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன. அடுத்து விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் விஜய் நடித்த சச்சின் சேரன் நடித்த ஆட்டோகிராப் அஜீத்குமார் நடித்த வீரம் போன்ற படங்கள் வெளிவர இருக்கின்றன.
இந்நிலையில் தயாரிப்பாளர் தேனப்பன், இப்போது பல படங்களில் நடித்தும் வருகிறார். அவர் பல படங்களில் நெகட்டிவ் ரைட்ஸ் வாங்கி வைத்துள்ள நிலையில் அடுத்ததாக அவர் விஜய் ஷாலினி நடித்த காதலுக்கு மரியாதை கார்த்திக் ரம்பா நடித்த உள்ளத்தை அள்ளித்தா கமல் சிம்ரன் நடித்த பஞ்ச தந்திரம் உள்ளிட்ட படங்களை அவர் ரி ரிலீஸ் செய்ய ஏற்பாடுகளை செய்து வருகிறார். இந்த படங்கள் எல்லாம் மாஸ் ஹிட் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.





