தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை, கடந்த சில ஆண்டுகளாக சினிமாவின் போக்கு மிக மோசமான நிலையில் போய்க்கொண்டு இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார், அருண் மாதேஸ்வரன் போன்ற டைரக்டர்கள் சினிமாவை வன்முறை களமாக மாற்றி விட்டனர். துப்பாக்கி, கத்தி,அரிவாள், வெட்டுக்குத்து, ரத்தம் என்ற கலாசாரத்துக்கு சினிமாவை மாற்றிவிட்டனர் என்பதை கசப்பான உண்மை.
குறிப்பாக லோகேஷ் கனகராஜ் போன்றவர்களின் மனநலத்தை சோதிக்க வேண்டும் என்று ரசிகர் வழக்கு தொடரும் அளவுக்கு, கடுமையாக விமர்சிக்கும் அளவுக்கு அவரது படங்கள் மிக கொடூரமான படங்களாக இருக்கின்றன. சினிமா என்பது சமூகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஊடகமாக, மக்களை மகிழ்ச்சிப்படுத்தும் சாதனமாக தான் இருக்க வேண்டும்.
மக்களின் நல்ல சிந்தனைகளை தடுக்கும், சமுதாய சீரழிவை உருவாக்கும், எண்ணங்களில் வன்மத்தை ஏற்படுத்தும் ஆத்திரத்தை, ஆவேசத்தை தீர்த்துக் கொள்ளும் ஒரு இடமாக மாற்றிய பெருமை லோகேஷ் கனகராஜ்,நெல்சன் போன்றவர்களுக்கு உண்டு. அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த படங்களை தர முடிந்த இவர்களால், நல்ல திரைக்கதை அம்சமுள்ள படங்களை தர இயலாது. ஏனெனில் கற்பனை வறட்சியில் தவிக்கும் இயக்குனர்கள் இவர்கள்.
கடந்த 4 மாதங்களாக தமிழ் சினிமாவில் ரிலீஸ் ஆன எந்த படமும் ரசிகர்கள் மனதில் ஒட்டவில்லை. ஆனால் மலையாளத்தில் வெளியான ஆடு ஜீவிதம், மஞ்சும்மெல் பாய்ஸ், பிரமயுகம், பிரேமலு போன்ற படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றன. ஏனென்றால் தமிழ் சினிமாவை போல் ஹீரோவை வைத்து அவர்கள் படம் எடுப்பதில்லை. கதையை நம்பி கதையை ஹீரோவாக்கி படம் எடுக்கிறார்கள், வெற்றி பெறுகிறார்கள். அந்த படங்களில் கதை தான் பேசுகிறது. நாயகனை யாரும் கொண்டாடுவதில்லை.
இந்த சூழ்நிலையில் நடிகர் விஜய் நடித்த கில்லி படம் ரி ரிலீஸ் ஆகி தமிழ் நாட்டில் சக்கைப் போடு போட்டு வருகிறது. இதற்கு காரணம் கில்லி படம் எல்லா விதங்களிலும் ரசிகர்களை திருப்திபடுத்தும் ஒரு சிறந்த படமாக இருப்பதால் காட்சிக்கு காட்சி அந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். இதையடுத்து மீண்டும் சூப்பர் ஹிட் படங்களை ரி ரிலீஸ் செய்ய, அந்த படங்களை தயாரித்த தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
அந்த வகையில், இந்தியன் படம் மே 30, குஷி படம் மே 19 அன்றும், அதற்கு முன்பாக மே 1ம் தேதி அஜித் பிறந்தநாளில், தொழிலாளர் தினத்தில் மங்காத்தா படமும், பில்லா படமும் ரிலீஸ் ஆகிறது. அது மட்டுமின்றி செல்வராகவன் இயக்கிய 7ஜி ரெயின்போ காலனி, லிங்குசாமி இயக்கிய ரன் போன்ற படங்களும் ரி ரிலீஸ் செய்யப்பட இருக்கின்றன. இதில் தற்போது உருவாகிய புதிய பிரச்சனை, இப்படி பழைய ஹிட் படங்கள் தியேட்டர்களுக்கு வரும்போது, ரசிகர்கள் கூட்டம் கண்டிப்பாக அந்த படங்களுக்கும் மிகப்பெரிய வரவேற்பை கொடுக்கும். அதே நேரத்தில் புதுப்படங்கள் ரிலீஸ் செய்ய தியேட்டர்கள் கிடைப்பதில், தயாரிப்பாளர்கள், நடிகர்களுக்கு சிக்கல் ஏற்படும் நிலை உருவாகிறது.





