அரவிந்த்சாமி ஒரு காலகட்டத்தில் இளம் பெண்களின் கனவுக்கண்ணனாக திகழ்ந்து வந்தவர். அவர் நடித்த பல திரைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்திருந்தாலும் அவரது Chubby ஆன கன்னங்களையும் வெள்ளாவி வைத்து வெளுத்தது போல் இருக்கும் உடல் நிறத்தையும் பார்ப்பதற்கே பல இளம் பெண்கள் அவரது திரைப்படங்களுக்கு செல்லத் தொடங்கினார்கள். எனினும் ஒரு கட்டத்தில் அரவிந்த்சாமிக்கும் மார்க்கெட் போனது. அதன் பின் பல வருட இடைவேளைக்கு பிறகு “கடல்”, “தனி ஒருவன்” ஆகிய திரைப்படங்களின் மூலம் கம்பேக் கொடுத்தார். ஒரு சிறந்த வில்லன் நடிகராக அரவிந்த்சாமி தற்போது ஜொலித்து வருகிறார்.

அரவிந்த்சாமி புகழின் உச்சத்தில் இருந்தபோது அவர் ஹீரோவாக நடித்த திரைப்படம் “மின்சார கனவு”. இத்திரைப்படத்தில் அரவிந்த்சாமியுடன் பிரபு தேவா, கஜோல் ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு 4 தேசிய விருதுகள் கிடைத்தது. அதுமட்டுமல்லாது இத்திரைப்படம் 150 நாட்களுக்கும் மேல் ஓடிய வெற்றித் திரைப்படமாகவும் அமைந்தது.
இத்திரைப்படத்தில் கஜோல், கன்னியாஸ்திரி ஆக வேண்டும் என்ற கனவில் இருப்பார். அவரை ஒரு தலையாக காதலிக்கும் அரவிந்த்சாமி, பிரபு தேவாவை அணுகி தனது காதலுக்கு உதவுமாறு கூறுவார். பிரபுதேவா அரவிந்த்சாமி காதலுக்கு உதவப்போய் ஒரு கட்டத்தில் பிரபுதேவாவும் கஜோலும் காதலிக்கத் தொடங்கிவிடுவார்கள். இறுதியில் அரவிந்த்சாமி பாதிரியாராக ஆகிவிட பிரபுதேவாவும் கஜோலும் திருமணம் செய்துகொள்வார்கள்.

ஆனால் முதலில் இத்திரைப்படத்தின் கிளைமேக்ஸ் இவ்வாறு உருவாக்கப்படவில்லையாம். அதாவது கஜோல் பிரபுதேவா, அரவிந்த்சாமி என யாரையும் ஏற்றுக்கொள்ளாமல் தான் நினைத்தது போலவே கன்னியாஸ்திரி ஆகிவிடுவாராம். இதுதான் முதலில் கிளைமேக்ஸ் ஆக இருந்ததாம். ஆனால் இந்த கிளைமேக்ஸை ரசிகர்கள் விரும்பவில்லையாம். அதன் பிறகுதான் அரவிந்த்சாமி பாதிரியார் ஆவது போலவும் பிரபுதேவா-கஜோல் ஜோடி திருமணம் செய்துகொள்வது போலவும் கிளைமேக்ஸை மாற்றினார்களாம். இவ்வாறு கிளைமேக்ஸை மாற்றியதால்தான் “மின்சார கனவு” திரைப்படம் வெற்றித் திரைப்படமாக ஆகியிருக்கிறது.





