மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் மம்முட்டி மற்றும் மோகன்லால். இருவருமே மிகவும் நெருக்கமான நண்பர்களாக உள்ளனர். கடந்த வாரத்தில் நடிகர் மம்முட்டிக்கு புற்றுநோய் ஏற்பட்டதாக தகவல் பரவியது. இது மலையாளம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனால் அவர் ரம்ஜான் நோன்பு இருந்து வருவதாகவும் அதனால் ஓய்வில் இருப்பதாகவும் நோன்புக்கு பிறகு அவர் படப்பிடிப்புகளில் வழக்கம்போல் கலந்துக்கொள்வார் எ்னறும் கூறப்பட்டது. இதற்கிடையே இருமுடி கட்டி சபரிமலைக்கு சென்ற நடிகர் மோகன்லால், நடிகர் மம்முட்டி உடல் நலம் பெற பிரார்த்தனை செய்தார்.
அந்த தகவல் புகைப்படங்களுடன் இணையத்தில் வெளியாகி வைரலானது. நடிகர் மம்முட்டி உடல் நலம் உண்மையில் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதால்தான் அவரது திரையுலக நண்பர் நடிகர் மோகன்லால் இப்படி சபரிமலை ஐயப்பன் கோவிலில் மம்முட்டி உடல் நலத்தை வேண்டி பிரார்த்தனை செய்திருப்பதாகவும் வேகமாக தகவல் பரவியது.
இந்த சூழலில் எல்2 எம்புரான் படத்தின் பிரமோ நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் மோகன்லாலிடம், சபரிமலையில் அவர் மம்முட்டிக்காக பிரார்த்தனை செய்தது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த நடிகர் மோகன்லால், மம்முட்டி எனது நெருங்கிய நண்பர் என்பதால் சபரிமலையில் பிரார்த்தனை செய்தேன். இதில் என்ன தவறு.
நண்பனுக்காக வேண்டுதல் செய்ததை வெளியிட தேவையில்லை. இது எனது தனிப்பட்ட விஷயம். ஆனால் இந்த தகவலை திருவிதாங்கூர் தேவசம்போர்டை சேர்ந்தவர்கள்தான் வெளியிட்டனர் என்று கூறியிருந்தார். அதே நேரத்தில் நடிகர் மம்முட்டிக்கு இருப்பது சாதாரண உடல் நல பாதிப்புதான். நம் எல்லோருக்கும் அதுபோல் வருவது சாதாரணம்தான். இதில் கவலைப்பட ஒன்றுமில்லை என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, சபரிமலையில் பூஜை நடத்தும்போது அதற்கான அசல் ரசீது பக்தர்களுக்கு வழங்கப்படும். முகமது குட்டி என்ற பெயரில் மோகன்லாலுக்காக பூஜை நடத்திய நபரிடம் அசல் ரசீது கொடுக்கப்பட்டது. அந்த ரசீதுதான் பத்திரிகைகளில் வெளியானது. தேவசம்போர்ட்டை சேர்ந்த யாரும் இந்த ரசீதை வெளியிடவில்லை. மோகன்லால் இதை தவறாக புரிந்து கொண்டுள்ளார். அவர் உண்மையை புரிந்துக்கொண்டு தனது நிலைப்பாட்டை திருத்திக் கொள்வார் என்று கருதுகிறோம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.





