தமிழ் சினிமாவின் மூத்த நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நயன்தாரா. ரஜினிகாந்த் அஜித் விஜய் என முன்னணி நடிகர்கள் உடன் அவர் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் ஒரு கட்டத்தில், ஹீரோயின் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலேயே அவர் நடிக்க ஆரம்பித்தார்.
இதில் கோலமாவு கோகிலா, அறம், மாயா உள்ளிட்ட திரைப்படங்கள் நயன்தாராவுக்கு கை கொடுத்தன. இதன் பிறகு அவர் தனக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்த எந்த திரைப்படங்களும் சரியாகப் போகவில்லை. நெற்றிக்கண், ஐரா உள்ளிட்ட திரைப்படங்கள் வந்த இடம் தெரியாமல் ஓடிப் போயின.
திருமணத்திற்கு பிறகு அவர் நடிப்பில் வெளியான எந்த திரைப்படங்களும் பெரிய வெற்றியை பெறவில்லை. இதனால் நடிப்பிற்கு சிறிது காலம் இடைவெளி விட்டிருந்த அவர் தற்போது மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். தற்போது அவர் நடிப்பில் மண்ணாங்கட்டி என்னும் திரைப்படம் உருவாகி வருகிறது.
யோகி பாபுவுக்கும் இந்த திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. கொடைக்கானல் சுற்றுவட்டார பகுதிகளில் இதனை படமாக்கினார்கள். இதேபோல் டெஸ்ட் என்னும் திரைப்படத்தில் நயன்தாரா நடித்து முடித்திருக்கிறார். மாதவன் சித்தார்த் ஆகியோர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் சசிகாந்த் இயக்கி இருக்கிறார். நேரடியாக ஓடிடியில் இந்த திரைப்படம் வெளியாகிறது.
இதுபோக கவின் உடன் அவர் நடித்து வரும் திரைப்படத்திற்கு ஹாய் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. பாடலாசிரியர் விஷ்ணு எடவன் தான் இந்த திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதுபோக சுந்தர் சி இயக்கும் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருக்கிறார் நயன்தாரா. 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த திரைப்படம் எடுக்கப்படுகிறது.
மலையாள இயக்குனர் கீது மோகன்தாஸ் இயக்கும் டாக்ஸிக் திரைப்படத்தின் கதாநாயகனாக, கேஜிஎப் நாயகன் யஸ் நடித்து வருகிறார். அவருக்கு சகோதரியாக நடிக்கிறார் நயன்தாரா. இதுபோக ராக்காயி திரைப்படமும் அவரது பட்டியலில் இருக்கிறது. மலையாளத்தில் மகேஷ் நாராயணன், மம்முட்டி மற்றும் மோகன் லாலை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்குகிறார். இதிலும் நயன்தாரா நடித்து வருகிறார். தற்போது கோலிவுட் வட்டாரத்தில் மிகவும் பிசியாக இருக்கும் நடிகை அவர்தான் என்று சினிமா விமர்சகர்கள் கூறியிருக்கின்றனர்.





