இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடித்த படம் கட்டாகுஸ்தி 2. கட்டா குஸ்தி முதல் பாகத்தின் அபார வெற்றிக்கு பிறகு இந்த 2வது பாகம் படம் நேற்று திரைக்கு வந்துள்ளது. கட்டாகுஸ்தி 2 படம் குறித்து திரைப்பட விமர்சகர் ப்ளு சட்டை மாறன் வீடியோ ஒன்றில் கூறியிருப்பதாவது, மலையாளத்தில் வெளியான ஜெய ஜெய ஜெய ஜெய ஹே படமும் இதுவும் ஒரே மாதிரியான கதை தான்.
அந்த படம் செம ஹிட். அதேபோல் கட்டாகுஸ்தி முதல் பாகம் வெற்றி அடைந்து விட்டது. ஆனால் மலையாளத்தில் இரண்டாவது பாகம் எடுக்க மாட்டார்கள். ஏனெனில் இதைவிடவும் நல்ல படம் எடுக்க எங்களால் முடியும் என்ற தைரியத்தில் அவர்கள் இருக்கிறார்கள். நம்முடைய கதி அப்படி இல்லையே? எப்போவாச்சும் ஒரு ஹிட் கிடைக்கிறது. அதை வைத்து பிழைக்க வேண்டியது தானே புத்திசாலித்தனமான வேலை? என்பது இங்கிருக்கும் கணக்கு.
கண்டிப்பாக வைத்து நம்மை சாகடிக்க போகிறார்கள் என்று தான் சென்று பார்த்தோம். ஆனால் அவர்கள் முதல் பாகத்துக்கும் இரண்டாவது பாகத்துக்குமான கதையை ஓரளவு முறையாகவே எழுதி இருக்கிறார்கள். இந்த படம் ஸ்போர்ட்ஸ் டிராமாவில் கொஞ்சம் ஃபேமிலி கொஞ்சம் காமெடியை கலந்து செய்யப்பட்டிருக்கிறது. காமெடி படம் என்றாலே லாஜிக் எதிர்பார்க்கக் கூடாது என்று சொல்வார்கள். எனவே அதற்கு நாம் தயாராகவே போனோம்.
இந்த படத்தில் ஓரளவுக்கு கதை இருந்தது. அதற்கான திரைக்கதையும் செய்திருந்தார்கள். படத்தில் நிறைய நல்ல சீன்கள் இருந்தன. ஆனால் அந்த நல்ல சீன்களை எல்லாம் ரொம்ப நல்ல சீன்களாக மாற்றாமல் விட்டுவிட்டார்கள். ஹீரோ ஸ்கோர் செய்ய வேண்டிய இடத்தை மேம்போக்காகவும் அவசர அவசரமாகவும் எடுத்து வைத்திருக்கிறார்கள். நிறைய நல்ல சீன்கள் படத்தில் இருக்கின்றன. படம் நன்றாக தான் போய்க்கொண்டிருந்தது.
திடீரென யோகி பாபு உள்ளே வந்து விட்டதால் இனிமேல் படம் அவ்வளவுதான் என்று நினைத்தோம். ஆனால் அவரிடமிருந்து எப்படியோ படம் தப்பித்து விட்டது. இந்த படத்துக்கு சரியான பினிஷிங் வைத்திருந்தார்கள். கட்டாக்குஸ்தி 1ல் கதையை அடுத்தடுத்து கணிக்க முடியாது. இரண்டாவது பாகத்தில் அப்படி இல்லை. இருப்பினும் முதல் பாகத்தை விடவும் இதில் கொஞ்சம் கூடுதலாக எமோஷனல் சீன்கள் வைத்திருக்கிறார்கள். அது ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.
பெரிதாக லாஜிக் எதுவும் பார்க்காமல் மூளை எல்லாம் கழட்டி வைத்துவிட்டு குடும்பத்தோடு ஒரு வார இறுதியில் படத்துக்கு செல்ல வேண்டுமென்றால் இந்த படத்துக்கு தாராளமாக போகலாம். பெண்கள் குழந்தைகள் படத்தை ரசிப்பார்கள். ஆண்களுக்கு பெரிதாக போர் அடிக்காது. கண்டிப்பாக இந்த படம் மோசம் இல்லை என்று சினிமா விமர்சகர் ப்ளு சட்டை மாறன் கூறியிருக்கிறார்.





