தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்திற்கு சொந்தக்காரர் நயன்தாரா. ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அவர், சந்திரமுகி படத்தில் ரஜினிகாந்த்துக்கு ஜோடியாக நடித்தார். பிறகு விஜய் அஜித் என முக்கிய ஹீரோக்களின் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தனது கேரியரை வளர்த்துக் கொண்ட நயன்தாரா, கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களுக்கும் ஆர்வம் காட்டி வருகிறார்.
இதில் அறம், கோலமாவு கோகிலா, மாயா உள்ளிட்ட திரைப்படங்கள் வெற்றி பெற்றன. ஆனால் அதன் பிறகு நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படங்கள் அனைத்தும், அதல பாதாளத்திற்கு சென்றன. இது ஒரு பக்கம் இருந்தாலும் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்வதில் நயன்தாரா கவனம் செலுத்தியே வருகிறார்.
கடந்த வருடம் அவர் நடிப்பில் இரண்டு திரைப்படங்கள் வெளியாகின. ஜெயம் ரவிக்கு ஜோடியாக இறைவன் திரைப்படத்தில் அவர் நடித்திருந்தார். பிறகு, ஜவான் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பாலிவுட்டிலும் நயன்தாரா அறிமுகமானார். திருமணத்திற்குப் பிறகு, தனது இரட்டை ஆண் குழந்தைகளை வளர்த்து வருவதில் கவனம் செலுத்தி வரும் அவர், தனக்கேற்ற கதைகளையும் தேர்வு செய்து நடித்து வருகிறார்.
தற்போது அவர், டெஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். சசிகாந்த் இயக்கும் இந்த திரைப்படத்தில், மாதவன் சித்தார்த் ஆகியோர் நடிக்கின்றனர். கிரிக்கெட்டை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் தனக்கான போர்ஷன்களை நயன்தாரா முடித்திருக்கிறார். இதுபோக மண்ணாங்கட்டி என்னும் திரைப்படத்திலும் நயன்தாரா நடித்து வருகிறார். அறிமுக இயக்குனர் விக்னேஷ் என்பவர் இதை இயக்குகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் நயன்தாராவின் 75 வது திரைப்படமாக அன்னபூரணி வெளியானது. பிராமண சமூகத்தை சேர்ந்த பெண், சமையல் கலையில் எப்படி சிறந்து விளங்குகிறாய் என்ற ஒன் லைன்னை அடிப்படையாகக் கொண்டு வெளியான இந்த திரைப்படம், தோல்வியடைந்தது. பிறகு ஓடிடி தளத்திலும் இந்த திரைப்படம் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் அன்னபூரணி திரைப்படம் மத உணர்வை புண்படுத்தி இருப்பதாக கூறி மும்பையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிவசேனா கட்சியைச் சேர்ந்த முன்னாள் தலைவர் ஒருவர் அளித்திருக்கும் புகாரில், படத்தில் ராமர் இறைச்சி சாப்பிடுவார் என்பது போன்ற வசனங்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அர்ச்சகர் மகளான கதாநாயகி, நமாஸ் செய்வது போலவும் காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இந்த படம் எடுக்கப்பட்டிருப்பதாக புகார் தெரிவித்த நிலையில் காவல் நிலையத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.





