தெலுங்கு சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராக இருப்பவர் தமன். இவர் இயக்குனர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் பாய்ஸ் டீம் 5 பேரில் ஒருவராக நடித்திருப்பார். எப்போதும் செக்ஸ் புத்தகங்கள் படிக்கும் ஆர்வம் கொண்ட மாணவர் கேரக்டரில் தமன் நடித்திருந்தார்.
ஆனால் பாய்ஸ் படத்தில் இசையமைக்கும் ஒரு கேரக்டராகவும் தமன் காட்டப்பட்டு இருப்பார். அது நிஜ வாழ்விலும் உண்மையாகி இருக்கிறது. தமன் பிரபல இசையமைப்பாளராக இருக்கிறார். சமீபத்தில் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் வெளியான கேம் சேஞ்சர் படத்தின் இசையமைப்பாளர் தமன் என்பது குறிப்பிடத்தக்கது.
இசையமைப்பாளர் தமன் பாடகி ஸ்ரீ வர்தினி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு ஒரு மகனும் இருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் இசையமைப்பாளர் தமன் ஒரு நேர்காணலில் பங்கேற்றார். அப்போது அவரிடம் திருமணம் செய்து கொள்ள சரியான வயது எது என்று அந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் கேள்வி கேட்க அதற்கு தமன், திருமணம் குறித்த பல விஷயங்களை வெளிப்படையாக ரசிகர்களுக்காக பகிர்ந்து இருக்கிறார்.
இதுபற்றி இசையமைப்பாளர் தமன் கூறுகையில், இப்போது யாரும் திருமணம் செய்யக்கூடாது என்றுதான் நான் சொல்ல விரும்புகிறேன். திருமண வாழ்க்கை மிகவும் கடினமாக இருக்கிறது. பெண்கள் எல்லோரும் இண்டிபெண்டெண்டாக இருக்கவே விரும்புகிறார்கள். யாருக்கு கீழும் அவர்கள் இருக்கவோ வாழவோ விரும்பவில்லை.
அப்படி கணவன், பிள்ளைகள், குடும்பம் என வாழ்ந்த ஒரு பெண்கள் சமுதாயத்தை நாம் இப்போது இழந்துவிட்டோம். கொரோனாவுக்கு பிறகு எல்லாமே மாறிவிட்டது. இன்ஸ்டாகிராம் தான் அதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. வாழ்க்கையில் இருக்கும் கஷ்டங்களைப் பற்றி யாரும் ரீல்ஸ் வெளியிடுவதில்லை.
அதனால் நான் யாருக்கும் திருமணம் செய்துக்கொள்ளுங்கள் என்று பரிந்துரை செய்ய மாட்டேன். அந்தளவுக்கு குடும்ப வாழ்க்கை மிகவும் கடினமாக இருக்கிறது என்று அந்த நேர்காணலில் மிகவும் வெளிப்படையாக தமன் பேசி இருக்கிறார். இவர் இப்படி வெளிப்படையாக பேச காரணம் சொந்த வாழ்க்கையில் திருமண உறவில் அவருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் காரணமாக இருக்குமா என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.





