மிஷ்கின், விஷாலை வைத்து “துப்பறிவாளன்” திரைப்படத்தை இயக்கினார். அத்திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து “துப்பாறிவாளன் 2” திரைப்படம் உருவானது. ஆனால் அத்திரைப்படத்தின் படப்பிடிப்பில் மிஷ்கினிற்கும் விஷாலுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின் மிஷ்கின் அத்திரைப்படத்தில் இருந்து வெளியேறினார்.

“துப்பறிவாளன் 2” திரைப்படத்தின் படப்பிடிப்பு லண்டன் பகுதியில் நடைபெற்று வந்தது. இத்திரைப்படத்தை விஷாலே தயாரித்திருந்தார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது பட்ஜெட் விஷயத்தில் இருவருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டு அதன் பின் மிகப்பெரிய சண்டையாக உருவானது. இத்திரைப்படத்தில் இருந்து மிஷ்கின் வெளியேறியபிறகு பல மேடைகளில் விஷாலை குறித்து கடுமையாக பேசினார். “பொறுக்கி சார் அவன்” என்று விஷாலை அவர் திட்டிய வார்த்தைகள் இப்போதும் டிரெண்டிங்கான ஒன்று.
இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் “அடியே” என்ற திரைப்படம் தற்போது உருவாகியுள்ளது. இத்திரைப்படம் பேரலல் யுனிவர்ஸ் என்ற கான்செப்ட்டை அடிப்படையாக வைத்து படமாக்கப்பட்டுள்ளது. அந்த பேரலல் யுனிவர்ஸில் பல விஷயங்கள் உல்டாவாக நடக்கிறது. பயில்வான் ரங்கநாதன் மியூசிக் டைரக்டராக இருக்கிறார். விஜய்யின் யோஹன் அத்தியாயம் ஒன்று திரைப்படம் ரிலீஸாகி மாபெரும் வெற்றிப்பெறுகிறது. விஜயகாந்த் பிரதமராக இருக்கிறார். இது போல் பல விஷயங்கள் வெவ்வேறு மாதிரி இருக்கிறது. இதில் மிஷ்கின் கதாபாத்திரத்தில் ஒருவர் வருகிறார். “பொறுக்கி சார் அவன்” என்ற வசனத்தை அந்த கதாபாத்திரம் பேசுவது போல் ஒரு வசனம் இருக்கிறது.

இந்த நிலையில் “அடியே” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற மிஷ்கின், “பொறுக்கி சார் அவன் என்று நான் கூறியதை பலரும் கூறிக்கொண்டே இருக்கின்றனர். என்னை பற்றி விஷாலிடம் யாராவது கேட்டால் நான் துரோகம் செய்ததாகவும் அதனை மறக்கமுடியாது எனவும் விஷால் கூறிக்கொண்டே இருக்கிறான். அப்படி நான் என்ன துரோகம் செய்தேன் என்று எனக்கு தெரியவில்லை.
ஆனால் விஷால் என் இதயத்திற்கு நெருக்கமானவன். இரண்டு பேரும் சண்டை போட்டுக்கொண்டோம். சண்டை போடாமல் எப்படி வாழ முடியும். ஒரு நல்ல நட்பு அது. நான் விஷாலை ரொம்ப மிஸ் பண்றேன். அவன் என்னை மிஸ் பண்ணமாட்டான், எனக்கு அது நன்றாகவே தெரியும். அவனுக்கு ஈகோ ஜாஸ்தி. எனக்கும் ஈகோ அதிகம் உண்டு, ஆனால் நான் அதனை மேனேஜ் செய்துகொள்வேன்.
நான் அவனை திட்டிய அந்த வார்த்தையை இனி நீங்கள் தவிர்த்துவிடலாம் என்று நினைக்கிறேன். அது கோபத்தில் சொன்ன வார்த்தை. அவன் மிகவும் இனிமையானவன். அவனுடைய படங்கள் வெற்றிபெற வேண்டும் என்று நான் வணங்கிக்கொண்டே இருக்கிறேன். உடனே நான் விஷாலுக்கு ஐஸ் வைப்பதாக பத்திரிக்கைகளில் எழுதிவிடாதீர்கள். நான் ஐஸ் வைக்க மாட்டேன். விஷாலுடன் இனி படமே பண்ணமாட்டேன். ஆனால் அவனுடன் இணைந்து பணியாற்றியது ஒரு நல்ல இனிமையான அனுபவம்” என்று மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசியுள்ளார்.





