தமிழ் சினிமாவில் மிகவும் தனித்துவமான இயக்குனராக வலம் வருபவர் மிஷ்கின். அவரது திரைப்படங்களில் இடம்பெறும் கேமரா கோணங்களே மிக வித்தியாசமாக இருக்கும். கால்களை மையப்படுத்தியே காட்சிகளை படமாக்குவதை தனி ஸ்டைலாக கொண்டவர்.

மிஷ்கின் ஒரு வெற்றி இயக்குனராக இருந்தாலும் தனது “நந்தலாலா” திரைப்படத்தில் நடிக்க தொடங்கியதில் இருந்து அவர் பல திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். இவர் உதவி இயக்குனராக பணியாற்றியபோதே “யூத்”, “காதல் வைரஸ்”, “ஜித்தன்” ஆகிய திரைப்படங்களில் சிறு கதாப்பாத்திரங்களில் வந்து போனார்.
அதனை தொடர்ந்து தனது “நந்தலாலா” திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க தொடங்கிய மிஷ்கின், அதனை தொடர்ந்து தான் இயக்கிய “ஓநாயும் ஆட்டுக்குட்டியும்” திரைப்படத்திலும் நடித்தார். அதன் பின் மற்ற இயக்குனர்களின் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். “சவரக்கத்தி”, “சூப்பர் டீலக்ஸ்”, “சுட்டுப்பிடிக்க உத்தரவு”, “பேச்சுலர்” போன்ற திரைப்படங்களில் நடித்த மிஷ்கின் தற்போது விஜய்யின் “லியோ”, சிவகார்த்திகேயனின் “மாவீரன்” போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மிஷ்கின் உலக சினிமாக்களை விரும்பி பார்ப்பவர். குறிப்பாக ஜப்பானிய திரைப்படங்களின் மீது அவருக்கு அதிக ஈடுபாடு உண்டு. அதே போல் உலக இலக்கியங்களிலும் அவருக்கு நல்ல பரிச்சயம் உண்டு. அவரது அறை முழுவதும் புத்தகங்களாக குவிந்து கிடக்கும். இந்த நிலையில் மிஷ்கின் கமல்ஹாசனுக்கு ஒரு கதை கூறியிருக்கிறார்.
கமல்ஹாசனும் உலக சினிமாக்கள் மற்றும் உலக இலக்கியங்களில் அதிக பரிச்சயமும் அறிவும் கொண்டவர் என்பதை பலரும் அறிவார்கள். இந்த நிலையில்தான் மிஷ்கின், கமல்ஹாசனை வைத்து ஒரு படம் இயக்குவதற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கதையை கூறினாராம்.

அப்போது கமல்ஹாசன் “இது அந்த ஹாலிவுட் படத்துல வர்ர கதைதானே” என்று கூறினாராம். அதன் பின் வேறு ஒரு கதையை கூறலாம் என்று முடிவெடுத்து மிஷ்கின் வேறு ஒரு கதையை கூறினாராம். அப்போது கமல்ஹாசன், “இது அந்த புத்தகத்தில் வந்த கதைதானே” என்று கூறினாராம். இவ்வாறு மிஷ்கின் எந்த கதையை கூறினாலும் அதனை கண்டுபிடித்துவிட்டாராம் கமல்ஹாசன். இந்த தகவலை பத்திரிக்கையாளர் அந்தணன் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டுள்ளார்.





