தருண்கோபி இயக்கத்தில் திமிரு படத்தில் நடித்த விஷால் நடிப்பும், சண்டைக்காட்சிகளில் அவர் காட்டிய துடிப்பும், யார் இந்த உயரமான இளைஞர் என்ற கேள்வியை எழுப்பி, தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது. அதன்பிறகு சண்டக்கோழி படத்தில் நடித்த போது, பக்கத்து வீட்டு பையன் போல, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிச்சயமானவராக மாறிப் போனார்.
தொடர்ந்து சிவப்பதிகாரம், தாமிரபரணி, பாண்டியநாடு, அவன் இவன் போன்ற பல படங்களில் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்தார். முதலில் தயாரிப்பாளர் சங்க நிர்வாகியாக இருந்த விஷால், இப்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். நடிகர் சங்க கட்டிடத்தை கட்டிவிட்டு, அந்த மண்டபத்தில்தான் என் திருமணத்தை நடத்துவேன் என சவால் விட்டுள்ளார்.
ஆனால் கடந்த பல ஆண்டுகளாகவே விஷால் நடித்த பல படங்கள் சரியாக ஓடவில்லை. விஷால் படங்கள் என்றாலே தெறித்து ஓடும் அளவுக்கு அவரது படங்கள் மிக மோசமான பிளாப் படங்களாக இருந்து வருகின்றன. இதற்கிடையே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி படம், விஷாலுக்கு கம்பேக் படமாக அமைந்தது. ஆனால் இந்த படத்தின் வெற்றிக்கு காரணம் நடிப்பு அரக்கன் எஸ்ஜே சூர்யாதான்.
இப்போது ஹரி இயக்கத்தில் ரத்னம் என்ற படத்தில் நடித்துள்ள விஷால், இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என எதிர்பார்க்கிறார். ஏனெனில் ஏற்கனவே தாமிரபரணி என்ற வெற்றி படத்தை விஷாலுக்கு கொடுத்தவர் இயக்குநர் ஹரி. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார். இப்போது துப்பறிவாளன் 2 படத்தை இயக்கி, நடிக்கும் முயற்சிகளிலும் விஷால் தீவிரம் காட்டி வருகிறார்.
இந்நிலையில் ரத்னம் படத்தின் இசை வெளியீட்டு விழா, தனியார் கல்லூரி ஒன்றில் நடந்தது. அப்போது கல்லூரி மாணவ மாணவியர் சிலர் விஷாலுடன் கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்தினர். அப்போது நீங்கள் பொது இடங்களில் சாப்பிடும்போது, சில ரியாக்சன்களை செய்து சாமி கும்பிடும் வீடியோ பயங்கர டிரண்டிங் ஆகி விடுகிறது. பலரும் அதை கிண்டல் செய்கிறார்களே, என்று விஷாலிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த விஷால், எல்லா சாமியும் எனக்கு ஒண்ணுதான். என் கழுத்துல மூனு சாமியோட கயிறு இருக்கு. இப்போது விளம்பரத்துக்காக நான் அப்படி பண்ணவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக நான் சாப்பிடும்போது இப்படிதான் சாமி கும்பிட்டு விட்டு சாப்பிடுகிறேன். இதற்காக நான் யாருக்கும் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கோபமாக பேசியிருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.





