ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில்தான் நேற்று முன்தினம் 6ம் தேதி அஜீத்குமார் நடித்த விடாமுயற்சி படம் வெளியானது. லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பு, மகிழ் திருமேனி இயக்கம், அனிருத் இசை, ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு, அஜீத்குமார் அர்ஜூன் ஆரவ் திரிஷா ரெஜினா கசாண்ட்ரா நடிப்பு என பிரமாண்ட கூட்டணியில்தான் இந்த படம் திரைக்கு வந்தது.
ஆனால் படம் பார்த்த ரசிகர்களுக்கு இந்த படம் போதிய திருப்தியை தரவில்லை. குறிப்பாக மாஸ் காட்ட வேண்டிய டாப் ஸ்டார் ஹீரோவான அஜீத்குமாரை இப்படி ஒரு கேரக்டரில் நடிக்க செய்திருப்பது ரசிகர்களை மிகவும் அப்செட் செய்திருக்கிறது. வில்லன்களிடம் கெஞ்சியபடி அஜீத்குமார் அடிவாங்கும் காட்சிகளை ரசிகர்களால் ஜீரணிக்க முடியவில்லை.
ஒரு படத்தின் முக்கிய அம்சம் கதை மற்றும் திரைக்கதை தான். அதில்தான் ரசிகர்களை கட்டுப்படுத்தி இரண்டரை மணி நேர படத்துடன் ஒருங்கிணைத்து பயணிக்க செய்ய முடியும். இடைவேளைக்கு பிறகு ரசிகர்களுக்கும் படத்துக்கும் சம்பந்தமே இல்லாமல் ஒரு கதை திரையில் ஓடினால் ரசிகர்களால் சீட்டில் அமர முடியாது. திரையை பார்க்க விரும்பாமல் பாக்கெட்டில் இருக்கும் செல்போனை தான் கைகள் தேடும்.
அப்படிதான் விடாமுயற்சி படத்தின் இரண்டாம் பாதி ரசிகர்களை சோதிக்கிறது. கடந்தாண்டில் வெளியான இந்தியன் 2, ஆண்டின் இறுதியில் வெளியான கங்குவா 2 படங்களும் கடந்தாண்டில் மிக மிக மோசமான விமர்சனங்களில் சிக்கிய படமாக இருந்தது. இந்த ஆண்டின் துவக்கத்திலேயே அந்த பெயரை விடாமுயற்சி பெற்று விட்டதாகவே பலரும் கூறுகின்றனர்.
இன்னும் ஒரு தரப்பினர், அஜீத்குமார் காணாமல் போன தனது மனைவி திரிஷாவை பாலைவனத்தில் தேடாமல் பனையூரில் தேடியிருந்தால் உடனே கிடைத்திருப்பார் என்றும், ஜப்பானில் கல்யாணராமன் படத்தில் ஜப்பானை சுற்றிப் பார்க்க சென்ற கவுண்டமணி கோவை சரளா ஜோடி, ஒரு கட்டத்தில் கோவை சரளா காணாமல் போக, கவுண்டமணி என் பொஞ்சாதியை பார்த்தீங்களா, ஜப்பானு நாட்டுக்குள்ளே என்று பாடி தேடி அலைவதை விடாமுயற்சி படத்தின் கதையாக பலரும் இணையதளங்களில் கிண்டலடிக்கின்றனர்.
இதற்கு மேலாக ஒரு ரசிகர் ரீல்ஸ் ஒன்றில் விடாமுயற்சி படம் குறித்து கூறுகையில், இந்த படத்தில் மொத்தம் 3 மெண்டல்கள் இருக்குது, அதில் 2 மெண்டல் திரிஷாவை கடத்திட்டு போயிடுது, பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணி பெண்களை விக்கறதுதான் அந்த மெண்டல்களோட வேலை. இதுல அந்த 3வது மெண்டல் யாருன்னா படம் பார்க்க வந்த நான்தான். அஜீத் படம் நல்லா இருக்குமுன்னு நம்பி வந்த நான்தான் அந்த 3வது மெண்டல் என்று கூறி கலாய்த்திருப்பது, இணையத்தில் வைரலாகி வருகிறது.





