இயக்குநர் நெல்சன், ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றியால் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக மாறிவிட்டார். இப்போது ஜெயிலர் படத்தின் 2ம் பாகத்தை அவர் இயக்குவதும் உறுதியாகி விட்டது. ஆனால் ரஜினி தற்போது நடித்துவரும் தசெ ஞானவேலுவின் ரஜினி 170 மற்றும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படம் ரஜினி 171 படங்களை முடித்த பிறகுதான், நெல்சன் இயக்கும் ஜெயிலர் 2 படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
எப்படியும் இந்த இரண்டு படங்களை முடிக்க, ரஜினிக்கு அடுத்த ஆண்டு இறுதி வரை தேவைப்படலாம். அல்லது வரும் 2024ம் ஆண்டில், செப்டம்பருக்கு பிறகு ஜெயிலர் 2 படத்தை துவக்க வாய்ப்புள்ளது. அல்லது 2025ம் ஆண்டில் எடுக்கலாம் என ரஜினி முடிவெடுக்கலாம். ஏனெனில் ஜெயிலரை தொடர்ந்து ரஜினி 170, ரஜினி 171 என 2 படங்களில் ரஜினிகாந்த் நடிப்பதால், சில மாதங்கள் ஓய்வுக்காக ரஜினி இடைவெளி விடலாம்.
இதற்கிடையே ஜெயிலர் படத்தின் வெற்றியை அடுத்து, தெலுங்கில் உள்ள சில முன்னணி ஹீரோக்கள், நெல்சன் இயக்கத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்தாக கூறப்பட்டது. அவர்களில் சிலரை, நெல்சன் சந்தித்து பேசியதாகவும் தகவல் அடிபட்டது. ஆனால், இதுவரை உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை. அதே போல் நடிகர் தனுஷை வைத்து இயக்க, நெல்சனிடம் பேச்சு வார்த்தை நடப்பதாகவும் ஒரு தகவல் பரவியது. ஆனால், அதுவும் நடக்கவில்லை.
இந்நிலையில், நயன்தாராவை மீண்டும் ஹீரோயினாக வைத்து கோலமாவு கோகிலா படத்தின் 2ம் பாகத்தை இயக்கலாம் என, திட்டத்திற்கு நெல்சன் வந்திருப்பதாக தகவல் தெரிய வந்துள்ளது. ஏனெனில், கோலமாவு கோகிலா படம்தான், நெல்சனுக்கு மிகப்பெரிய அடையாளத்தை தந்தது.
கோலமாவு கோகிலா படத்தை தொடர்ந்துதான் டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் போன்ற படங்களை இயக்கும் வாய்ப்பு நெல்சனுக்கு கிடைத்தது. பீஸ்ட் படம் ஏமாற்றத்தை தந்தாலும், ஜெயிலர் மிகப்பெரிய வெற்றியைத் தந்து நெல்சனை வேற லெவலுக்கு கொண்டு சென்றுவிட்டது. அதனால், நயன்தாராவை மீண்டும் இயக்கலாம் என நெல்சன் முடிவுக்கு வந்திருப்பதாக தெரிகிறது.
கோலமாவு கோகிலா, நயன்தாராவுக்கு மிகப்பெரிய வெற்றியை, அடையாளத்தை கொடுத்த படமாக அமைந்தது. அதனால், எப்போது நீங்க கூப்பிட்டாலும் நான் வருவதற்கு தயாராக இருக்கிறேன். அதனால், என்னை வைத்து படம் எடுப்பதாக இருந்தால் உடனே வருகிறேன், என்று ஏற்கனவே நயன்தாரா, நெல்சனுக்கு உறுதி மொழி தந்திருக்கிறார். ஆகவே, இப்போது கோலமாவு கோகிலா 2 படம் எடுக்க நெல்சன் திட்டமிட்டு வருகிறார். ரஜினியை தொடர்ந்து, லேடி சூப்பர் ஸ்டாரை நெல்சன் இயக்குவதால், அதிர்ஷ்டகார மனுஷன்யா, எங்கேயோ இவருக்கு மச்சம் இருக்கு, என கோலிவுட்டில் பலரும் பாராட்டி வருகின்றனர்.





