தமிழ் இலக்கியத்தில் மணிமகுடமாக கருதப்படுவது கல்கி எழுதிய பொன்னியின் செல்வன். சோழர்களின் வரலாற்றையும் சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இருந்த பகையையும் வைத்து தனது கற்பனையை கலந்து எழுதிய அந்த நாவலுக்கு பல தலைமுறையினர் ரசிகர்களாக இருக்கின்றனர். அதை படித்த ஒவ்வொருவரும் அந்த நாவலை சிறந்த நாவல் என்றே கூறுவதுண்டு.
அப்படிப்பட்ட நாவலை திரைப்படமாக்க முதலில் எம்ஜிஆர் முயன்று அதற்கான திரைக்கதை எழுதும் பணியை மறைந்த இயக்குநர் மகேந்திரனிடம் கொடுத்தார். ஆனால் அது பாதியிலேயே நின்றுபோனது. அதனையடுத்து அந்த முயற்சியை கமல் ஹாசன் கையில் எடுத்தார். இருந்தாலும் கமலாலும் அந்த முயற்சியை நிறைவேற்ற முடியவில்லை.
இப்படி இரு பெரும ஆளுமைகளாலும் செய்ய முடியாததை மணிரத்னம் கையில் எடுத்தார். அதற்கு லைகா நிறுவனமும் துணை நின்றது. அதன்படி மொத்தம் ஐந்து பாகங்களை கொண்ட பொன்னியின் செல்வன் நாவல் இரண்டு பாகங்களாக திரைப்படமானது. அதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்தது.
இதன் முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இருந்தாலும் வசூலில் சக்கைப்போடு போட்டது. அதனையடுத்து இரண்டாம் பாகம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. முதல் பாகத்தைவிட இந்த பாகம் கடும் விமர்சனத்தை சந்தித்தது. குறிப்பாக வரலாறை மணிரத்னம் மாற்றி படமாக எடுத்திருக்கிறார் என்ற விமர்சனம் அதிகளவு எழுந்தது.
விமர்சனங்கள் பல எழுந்தாலும் மணிரத்னத்தின் மேக்கிங் ஸ்டைல் பலரையும் ஈர்த்தது. அதிலும் பூங்குழலி கதாபாத்திரம் ரொம்பவே ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அதில் முதலில் கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அவர் நடிக்காமல் போக ஐஸ்வர்யா லட்சுமி அந்தக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் ஐஸ்வர்யா லட்சுமிக்கும் முன்னதாக நடிகை நிவேதா பெத்துராஜை இந்த கேரக்டருக்காக மணிரத்னம் ஆடிஷன் செய்திருக்கும் விஷயம் இப்போது தெரியவந்திருக்கிறது. இதுகுறித்து நிவேதா அளித்த ஒரு பேட்டியில், “பூங்குழலில் கதாபாத்திர ஆடிஷனுக்காக சென்றிருந்தேன். அவர்கள் கொடுத்த ஸ்க்ரிப்பட்டை நிதானமாக படித்துவிட்டு வசனங்களை 15லிருந்து 20 நிமிடம்வரை மனப்பாடம் செய்தேன்.
அப்போது மணிரத்னம் சாரும் வந்துவிட்டார். என்னிடம் அவர் மன்னிச்சிடுங்க என்ற வசனத்தை தமிழில் சொல்ல சொன்னார். ஆனால் நானோ ஆங்கிலத்தில் I am Sorry என்று கூறிவிட்டேன். இதனை எதிர்பார்க்காத அவர் அவ்வளவு சத்தமாக சிரித்தார். அவர் இப்படி சிரித்து நானும் சரி யாரும் சரி அதுவரை அப்படி பார்த்ததில்லை. எனக்கு பதறிவிட்டது. உடனே சார் இனி என்னை எப்போதுமே ஆடிஷன் செய்யாதீர்கள். ஒரு கூட்டத்தில் மூலையில் நிற்கவையுங்கள் அது போதும் என சொல்லிவிட்டு வந்துவிட்டேன்” என்றார்.





