தமிழ் சினிமாவில் நல்ல கதைக்குதான் பஞ்சம் என்றால், டைட்டிலுக்கு அதை விட பல ஆண்டுகளாக பஞ்சம் நிலவி வருகிறது. சிங்கம் புலி குட்டிப்புலி ஈ பன்னிக்குட்டி ஏண்டா தலைக்கு எண்ணெய் வைக்கலே என் ஆளோட செருப்ப காணோம் என்றெல்லாம் தலைப்பு வைத்து வருகின்றனர். இன்னும் பல படங்கள் பழைய படங்களின் டைட்டில்களாக இருந்து வருகின்றன.
அதுமட்டுமின்றி பல படங்களின் டைட்டில், ஷூட்டிங் முடியும் வரை வைக்கப்படுவதே இல்லை. டைட்டிலை யோசிக்க கூட நேரம் செலவு செய்ய இன்றைய இயக்குனர்கள் தயாராக இல்லை. அந்தளவுக்கு தமிழ் சினிமாவில் டைட்டில் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. கடைசியில் பழைய டைட்டிலை அல்லது ஏதாவது பிராணியின் பெயரை வைத்த சமாளித்து வருகின்றனர்.
பகல்ஹாம் நகரில் சமீபத்தில் பயங்கரவாதிகளின் திடீர் தாக்குதல் நடந்தது. அதற்கு பதிலடி தரும் விதமாக இந்திய ராணுவமும் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் போர் நடவடிக்கை எடுத்து அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. பகல்ஹாமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் கணவனை இழந்த பெண்களால் இந்திய மக்களிடம் பெரும் சோகம் ஏற்பட்டது.
கணவனை பயங்கரவாத தாக்குதலுக்கு பறிகொடுத்த அந்த பெண்களுக்கு நியாயம் ஏற்படுத்தும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் என இந்திய ராணுவம் நடத்தி வரும் பதில் தாக்குதலுக்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்தியில் சிந்தூர் என்றால் தமிழில் குங்குமம் என்று அர்த்தம். இந்தியப் பெண்களின் வாழ்க்கையில் குங்குமம் என்பது சென்டிமெண்ட் சார்ந்த ஒன்று. ஆபரேசன் சிந்தூர் குறித்து ரஜினி விஜய் சிவகார்த்திகேயன் இளையராஜா போன்ற தமிழ் சினிமா பிரபலங்கள் மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.
அதனால் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரை தங்களது படத்திற்கு டைட்டிலாக பதிவு செய்ய இந்தி திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் இயக்குனர்கள் பலர் விண்ணப்பம் தந்துள்ளனர். கடந்த 2 நாட்களாக இந்த பெயர் இந்திய அரசியல் பிரபலங்கள் சினிமா பிரபலங்கள் இந்தியர்களால் அதிகம் உச்சரிக்கப்பட்ட ஒரு முக்கிய பெயராக உள்ளது. ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. இது எதிர்கால ராணுவ வரலாற்றிலும் இந்திய வரலாற்றிலும் நிலைத்து நிற்கும் அளவிற்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதனால் யார் முதலில் விண்ணப்பித்திருக்கிறார்களோ அவர்களுக்கு தான் ஆபரேஷன் சிந்தூர் என்ற டைட்டில் முறைப்படி தரப்படும். அந்த வகையில் அந்த டைட்டிலை பெறப் போகிறவர் யார் என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்து விடும். அதே நேரத்தில் தமிழ் சினிமாவில் இந்த பெயரை யாரேனும் பதிவு செய்ய விண்ணப்பித்திருக்கிறார்களா எனத் தெரியவில்லை. இருப்பினும் இந்தியில் இந்த டைட்டில் வந்து விட்டால் தமிழில் இந்த டைட்டில் கிடைப்பதும் சிக்கல்தான் என்று சினிமா விமர்சகர்கள் கூறுகின்றனர்.





